இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் கண்ணி வெடியகற்றும் பணிக்காக கனேடிய அரசாங்கம் 8.3 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இதற்கமைய வட மாகாணத்தில் கண்ணி வெடியகற்றும் வேலைத் திட்டத்துக்காக 02 மில்லியன் கனேடிய டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் பெண்களும் இளைஞர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டுமென்றும் கனடா உறுதியாக அறிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிரான்சிஸ் பிலிப் செம்பெயின் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கரீனா கோல்ட் ஆகியோர் இது தொடர்பில் இணைந்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அதில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது, மீட்கப்படாத கண்ணி வெடிகள் அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் வருடாந்தம் 7,000 பேர் தமது வாழ்க்கையை இழந்து வரும் அதேநேரம் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.
இதன் காரணமாகவே ஒட்டாவா பிரகடனத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதற்காக 8.3 மில்லியன் கனேடிய டொலர்களை வழங்குவதாக கனடா மீள் உறுதி செய்துள்ளது.
கண்ணி வெடியகற்றும் வேலைத்திட்டத்தில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டுமென்பதில் கனடா அக்கறையுடன் இருக்கின்றது. இதன் மூலம் பாதுகாப்பான சமூகமொன்றை கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் பங்குதாரர்களாகும் சந்தர்ப்பம் கிட்டுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் ஈராக்கில் கண்ணி வெடியகற்றும் பணிக்காக 02 மில்லியன் கனேடிய டொலர்களையும் கனடா ஒதுக்கியுள்ளது. மேலும் கண்ணிவெடியை முற்றாக ஒழிக்கும் தொழில்நுட்ப உதவிகளுக்காக கனடா 4.3 மில்லியன் கனேடிய டொலர்களை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment