வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் : ஒரு பொருளாதார கண்ணோட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் : ஒரு பொருளாதார கண்ணோட்டம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட ஒழுங்கின்படி ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலிலும் திசாநாயக்கவின் விஞ்ஞாபனம் இரண்டாவதாகவும் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் இறுதியாகவும் வெளியிடப்பட்டன. 

‘தான் பதவிக்கு வந்தால் என்ன செய்வேன்’ என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கே ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுகின்றன. 

கடந்த காலங்களிலும் பொதுத்தேர்தல்களின் போதும் ஜனாதிபதி தேர்தல்களின் போதும் பல்வேறு பெயர்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் பெரும் எடுப்பில் அவை வெளியிடப்பட்டன. விஞ்ஞாபனங்கள் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை விடவும் அவற்றை வெளியிடும் நபர்களின் பெயர்களை முதன்மைப்படுத்தியும் வெளியிடப்பட்டமையை இந்நாடு ஏற்கனவே கண்டுள்ளது. 

“தேர்தல் வாக்குறுதிகளும் பணியாரத்தின் பொருக்குகளும் பிய்ப்பதற்கென்றே ஆக்கப்பட்டவை” என்றொரு சொல்லாடல் வழக்கில் உண்டு. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்ட இலக்குகளை அவற்றை வெளியிட்டு வெற்றி பெற்ற எந்தக் கட்சியாவது ஐம்பது சதவீதமேனும் நிறைவேற்றியுள்ளனவா? குறைந்த பட்சம் அது குறித்து ஞாபகத்திலாவது வைத்துள்ளனவா என்று நோக்கினால் ஏமாற்றமே நமக்கு மிஞ்சும். 

ராஜபக்ஷவின் விஞ்ஞாபனத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இராணுவத்திற்கும் பாதுகாப்புத் துறைக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மற்றபடி எல்லாமே இரண்டாம் பட்சம் தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆணையிட்டால் பொருளாதாரம் உள்ளபடி இயங்கும் என்ற தோரணையில் பல்வேறு வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. அதிலிருந்து மீண்டுவர ஒரு உறுதியான தலைமைத்துவம் தேவை. அதனை ராஜபக்ஷ ஒருவராலேயே பூர்த்தி செய்யமுடியும் என்ற அடிப்படையில் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. இலங்கை பன்மைத்தன்மை கொண்ட நாடு என்றோ சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் பற்றியோ நல்லாட்சி மனித உரிமைகள் குறித்தோ கிஞ்சித்தேனும் கரிசனை கொண்டதாக ராஜபக்சவின் விஞ்ஞாபனம் அமையவில்லை. 

திசாநாயக்கவின் விஞ்ஞாபனம் தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருந்த போதிலும் பூதாகரமான ஒரு பிரச்சினையாக அதனைக் கருதவில்லை. சமூக நீதி, பொருளாதார மேம்பாடு, அரசியல் வெளிப்படைத்தன்மை நியாயத்துவம் பற்றியே அது கூடிய அக்கறை செலுத்துகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்லாத பல்வேறு வாக்குறுதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பிழையானது என்று எவரும் புறந்தள்ளிவிட முடியாது. 

பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்துகிறது. பாதுகாப்புத்துறைக்கு பொருத்தமான ஒருவரை நியமித்தல், பாதுகாப்புத் துறையை நவீனமயப்படுத்தல், சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் எல்லா நாடுகளையும் நட்பு நாடுகளாக்கிக் கொள்வதன் ஊடாக பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பது அதில் முக்கியமானது. பாதுகாப்புத்துறையை துறைசார்ந்த வல்லுநர்கள் கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதே கருத்தாகும். அத்தோடு முப்படைகளின் தளபதி என்றவகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விஞ்ஞாபனம் கருதுகிறது. 

இலங்கை பல்லினத்தன்மை வாய்ந்த நாடு என்பதை கொள்கையளவில் இவ்விஞ்ஞாபனம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ராஜபக்ஷ விஞ்ஞாபனம் சராசரி பெரும்பான்மை வாக்காளர்களைக் கவரக்கூடிய பல முன்மொழிவுகளை கொண்டுள்ளது. இலவச உரமானியம் அதில் ஒன்றாகும். விவசாயிகளின் வாக்குகளுக்காக முன்வைக்கப்பட்ட இதே முன்மொழிவுக்கு எதிர்வினையாக உரமானியத்துடன் விதை நெல்லும் வழங்கப்படுமென பிரேமதாச விஞ்ஞாபனம் சொல்கிறது. சுமார் 45 பில்லியன் ரூபா வருடாந்த செலவு இதற்காக ஏற்படுமென கூறப்படுகிறது. 

2024 ஆண்டுக்குள் சராசரி வளர்ச்சி வேகத்தை 6.5% வீதமாகவும் தலா வருமானத்தை 6500 டொலர்களாக உயர்த்த போவதாக ராஜபக்ஷ விஞ்ஞாபனம் கூறுகிறது. தற்போதைய உலக மற்றும் உள்நாட்டு பொருளாதார புறச் சூழல்கள் கவனத்திற்கொள்ளுமிடத்து இது மிகைப்படுத்தப்பட்ட எய்த முடியாத இலக்காகும். 

பிரேமதாசவின் விஞ்ஞாபனம் நாட்டை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றி போட்டித்தன்மை வாய்ந்த சந்தைகள் ஊடாக மக்களின் வருமான வட்டத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தப் போவதாக உறுதியளிக்கிறது. வளர்ச்சி இலக்குகள் பற்றிய இலக்கங்கள் அதில் இல்லை. 

வரி செலுத்துவோரின் வாக்குகளைக் கவர ராஜபக்ஷ விஞ்ஞாபனம் Paye வரியை நீக்கிவிடுவதாகவும் Vat வரியை 15% இலிருந்து 8% ஆக குறைக்கப்போவதாகவும் உறுதியளிக்கிறது. இதன் மூலம் சுமார் 425 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படலாமென விமர்சனங்கள் கூறுகின்றன. மறுபுறம் பிரேமதாச விஞ்ஞாபனம் NBT மற்றும் VAT ஐ ஒன்றிணைத்து 15% ஆக அறவிடப்போவதாகவும் பின்னர் அதனை 12.5% குறைக்க எத்தனிப்பதாகவும் கூறுகிறது. Paye வரி தொடர்ந்து அறவிடப்படும் எனவும் வரிக் கட்டமைப்பும் வரி செலுத்தும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும் எனவும் கூறுகிறது. ராஜபக்ஷ விஞ்ஞாபனம் Paye செலுத்துபவர்களுக்கு கவர்ச்சிகரமான ஒன்றாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அது அரசாங்கம் வருவாயிலும் வருமான ஏற்றத்தாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

தற்போது அறவிடப்படும் Paye வரிகளில் 98 சதவீதமானவை நாட்டின் செல்வந்த 30% வீதமானோரிடம் அறவிடப்படுவதாக வரி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இரு வேட்பாளர்களிலும் வாக்குறுதிகளை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது அரசாங்க செலவுகளை பலமடங்கு அதிகரிக்கும் சங்கதிகளையும் அரசாங்க வருவாயை குறைக்கும் சங்கதிகளையும் உள்ளடக்கியுள்ளமையை வெளிப்படையாகக் காணலாம். 

2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட (வரவு செலவுத்திட்டத்திற்கு பதிலாக) கணக்கறிக்கையின் படி மொத்த செலவினம் 4,410 பில்லியனாகவும் அரசாங்க வருமானங்கள் 2,235 பில்லியன் ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டது. இதன்படி மொத்த துண்டுவிழும் தொகை 2,175 பில்லியன் ரூபாவாகும். எனவே இலங்கையின் அரசிறை செயற்பாடுகள் மிக மிக பலவீனமாக நிலையில் உள்ளதுடன் வெளிநின்ற கடன்கள் தொடர்ந்தும் உயர்மட்டத்தில் காணப்படுகின்றன. பொருளாதாரத்தின் மந்தமான செயலாற்றும் அரசியல் செயற்பாடுகளில் நிலவும் பலவீனமான தன்மை காரணமாக அரச நிதி நிலைமை ‘கஜானா காலி’ என்பதற்கப்பால் ‘கடன் பெறாமல் தொடர்ந்து வாழ்க்கை நடந்த முடியாது’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரபலமான சலுகைகளை மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரிக்கும் உத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதாளத்தில் தள்ளி விடலாம். 

விஞ்ஞாபனங்களில் காணப்படும் பொருளாதார விவகாரங்கள் பொருளாதார வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடும். ஆயினும் அவற்றை மக்களுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. ஆட்சிக்கு வருவதற்காக நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை வழங்குவது ஒன்றும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு புதிதல்ல. ஆயினும் முன்னோக்கிச் செல்லும் ஒரு ஜனநாயக சமூகமாக மாறவேண்டுமாயின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனங்களின் குறிப்பிடப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான பணத்தை எங்கிருந்து தீட்டப்போகிறார்கள் என்ற புரிதல் வேட்பாளர்களுக்கு உள்ளதா என்ற வினா தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. அதுபற்றி எந்த விஞ்ஞாபனமும் வாய் திறக்கவேயில்லை. 

ஒருபுறம் சகோதரனின் ஆட்சியில் ‘யாரும் கேள்வி கேட்க முடியாத’ அதிகாரங்களுடன் சர்வ வல்லமை பொருந்திய ஒரு அமைச்சுச் செயலாளராக ஆட்டிப்படைத்த ஒருவர் என்றால் மறுபுறம் தகப்பன் ஆட்சியாளனாக இருந்தபோது சிறுவனாக இருந்து படிப்படியாக அரசியல் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட பின்வரிசை அங்கத்தவராக இருந்து சமகால அரசியல் களத்தில் தவிர்க்க முடியாதவாறு வேட்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டவர். இவ்விருவரிடையே இந்த இறுதிப் போட்டி நிகழ்கிறது. 70ஆவது முதியவருக்கும் 52 வயது இளைஞனுக்கும் இடையிலான போட்டியாகவும் சமூக ஊடகங்கள் இதனை சித்தரிக்கின்றன. 

பெரும்பான்மை ஸ்ரீமான் பொதுசனத்தை 2015- / 2019 காலப்பகுதியில் பதவியிலுள்ள அரசாங்கத்தை ‘திராணியற்ற அரசாங்கம்’ என்று கருதச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காய்நகர்த்தும் ராஜபக்ஷ குடும்பம், அவரில்லாமல் நாட்டை மீட்க முடியாது என்ற மனப்பிராந்தியை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்த முனைகிறது. மறுபுறம் சூடுபட்ட அனுபவம் கொண்ட பூனைகள் அதற்கெதிராக போராட்டம் நடத்தும் நிலை. 

மதில் மேல் பூனையாக சிறுபான்மைக் கட்சிகள் இருந்த நிலைமாறி இரு வேறு கோட்டைகளுக்குள்ளும் தற்போது பாய்ந்துள்ளன. 

சில பூனைகள் இன்னும் செய்வதறியாது நடுநிலை வகிக்க விரும்புகின்றன. வழமைபோலவே அமைச்சுப் பதவிக்களுக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஏங்கும் குள்ளநரிக் கூட்டம், அதிகாரிகள் வர்க்கமும் 16ம் திகதி முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் குள்ளநரிக்கூட்டம் ஆட்சி அதிகாரத்தை எப்போதும் பங்கு போட்டு அனுபவிக்கும். தமிழ், இஸ்லாம் சிறுபான்மை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. சூடேறிய தாய்ச்சியில் தான் இவ்விரு சமூகங்களும் வறுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் இருந்து அடுப்பில் நேரடியாக விழுவதென்பது அவர்கள் தற்போது எதிர்நோக்கும் தலைவிதி. 

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment