(எச்.எம்.எம்.பர்ஸான்)
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி புதிய யுக்தியைக் கையாண்டு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் முக்கிய நூறு மாணவர்களைத் தெரிவு செய்து கோத்தா ஜனாதிபதியாக வருவார், கோத்தா ஜனாதிபதியாக வருவார் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்தோடு குறித்த மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அழைத்து நீங்கள் கேட்பதை நாங்கள் உங்களுக்கு செய்து தருகின்றோம் நீங்கள் மக்கள் மத்தியில் சென்று கோத்தா வெல்லுவார் என்று மட்டும் சொல்ல வேண்டும் அது மாத்திரம்தான் நீங்கள் செய்ய வேண்டிய பிரசாரமாகும். குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் சென்று இவ்வாறான கதைகளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான கதைகளும், விடயங்களும் அரசியல் கால கட்டங்களில் ஏற்படும் தந்திரோபாயங்களாகும். எனவே மக்கள் இவ்வாறான கதைகளிலிருந்து நிதானமாக செயட்பட்டு நாட்டு மக்கள் நிம்மதியாக மூச்சு விட்டு வாழ்வதற்கு சஜித் பிரமதாசாவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment