சமூக நீதி அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் - எல்.ரீ.ரீ.ஈயின் குமரன் பத்மநாதன், தயா மாஸ்டர் சுதந்திரமாக வெளியில் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

சமூக நீதி அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் - எல்.ரீ.ரீ.ஈயின் குமரன் பத்மநாதன், தயா மாஸ்டர் சுதந்திரமாக வெளியில்

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியல் கைதிகள் விடயத்தில் சட்ட விவகாரத்தை விட வேறு விசேட நிலைமையே காணப்படுகிறது.

எல்.ரீ.ரீ.ஈயின் முக்கியஸ்தரான குமரன் பத்மநாதன் எந்த வித வழக்கு விசாரணையும் இன்றி விடுவிக்கப்பட்டார். ஆனால் புலிகளின் அடையாள அட்டை வைத்திருந்த இளைஞரை கைது செய்துள்ள அதேவேளை அடையாள அட்டையில் கையொப்பமிட்ட தயா மாஸ்டர் வௌியில் சுதந்திரமாக இருக்கிறார்.

சமூக நீதி அடிப்படையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 20 வருடங்கள் வரை தடுப்புக் காவலில் உள்ளனர். இதனையும் சீர் செய்ய வேண்டும்.

1978 அரசியலமைப்பு 19 தடவைகள் மாற்றப்பட்டு ஒரு சிதைந்த நிலையில் உள்ளது. 19 ஆவது திருத்தத்தினூடாக மக்களின் ஜனநாயக உரிமைகள் பலமடைந்தாலும் இரு அதிகார சக்திகள் உருவாகியுள்ளன.

புதிய அரசியலமைப்பின் தேவை உணரப்பட்டுள்ளது. புதிய யாப்பில் மொழி, மதம் கிராமம் நகரம் என்ற பேதமின்றி ஆட்சியில் இணை பங்காளர்களாக மக்கள் இணைக்கப்பட வேண்டும். இது தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாகாது. போதைப் பொருள் தருவிக்கும் வியாபாரிகள் யாரும் கைது செய்யப்படுவதில்லை. அரசியல்வாதிகள் அவர்களை பாதுகாக்கின்றனர் என்றார்.

இங்கு எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒரு நபரை மகிழ்விப்பதற்கான இலஞ்சமாகவே அமைச்சுப் பதவி வழங்கப்படுகிறது. எம்.பி சண்டை ​போட்டால் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. 

விஞ்ஞானபூர்வமாக அமைச்சர்களை நியமிப்பதாக கூறினாலும் ஒவ்வொருவரை மகிழ்விக்கவே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறான அமைச்சரவையினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அமைச்சர்களாக நியமிக்க தகுதியானவர்கள் தான் எமது அணியில் உள்ளனர் என்றார். 

No comments:

Post a Comment