மலையக மக்கள் சோற்றுக்கும் மதுவுக்கும் சோரம் போனவர்கள் அல்லர் - ஜனநாயகவாதி சஜித், அராஜகவாதி கோட்டாபய : அமைச்சர் பழனி திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

மலையக மக்கள் சோற்றுக்கும் மதுவுக்கும் சோரம் போனவர்கள் அல்லர் - ஜனநாயகவாதி சஜித், அராஜகவாதி கோட்டாபய : அமைச்சர் பழனி திகாம்பரம்

மலையக மக்கள் சோற்றுக்கும் மதுவுக்கும் சோரம் போனவர்கள் அல்லர் என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் ஜனநாயகவாதி சஜித் எனவும், அராஜகவாதி கோட்டாபய ராஜபக்ஷ எனவும் விமர்சித்துள்ளார்.

ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இன்று (04) நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் 3 வது பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரவித்தார்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, எம். ராம், எம். உதயா, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் மலையக மக்களுக்கு தேவைகளை செய்து விட்டு அவர்களிடம் வாக்குகளை கேட்கின்றோம். ஆனால் சிலர் மலையக மக்களை அடகு வைத்து அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வலம் வருகின்றனர்.
எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் மக்களை வேண்டிக் கொள்கின்றது.

மலையகத்தில் மறுமலர்ச்சி மிக்க மேலும் ஒரு மாற்றத்தினை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஊடாக நடைமுறைக்கு வரும். அது சஜித் பிரேமதாசவின் ஊடாக வரவிருக்கின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணிகளுடன் தனி வீடுகளை அமைத்து அவர்களை மாற்றத்திற்கு கொண்டு வர நாம் போராடி வருகின்றோம். ஆனால் மலையக அரசியல்வாதிகள் சிலர் எமக்கு இடம் வேண்டாம், மாடி வீடுகளே போதும் என பிரச்சாரித்து வருகின்றனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு மாடி வீடுகள் மற்றும் ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மலையக மக்களுடைய மறுமலர்ச்சிக்காக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் ஜனநாயக தலைவராக சஜித் பிரேமதாச விளங்குகின்றார். ஆனால் அராஜகவாதியாக கோட்டாபய திகழ்கின்றார்.

நாம் ஜனநாயகவாதியான சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும். அன்னம் சின்னம் மலையக மக்களுக்கு தெரியாது என சொல்லி வருகின்றனர். ஆனால் மலையக மக்களுக்கு அன்னம் சின்னமும் விளங்கும். அனைத்து சின்னங்களும் விளங்கும். ஆகையால் மலையக மக்களின் தேர்வாக அன்னம் சின்னம் வெற்றிப்பெறும் என்பதில் உறுதியாக தெரிவிக்கின்றேன்.

எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டின் தலை எழுத்தையும் மலையக மக்களுக்கு ஒரு மாற்றத்தையும் உருவாக்க அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். காரணம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தார்.

அவருடைய புதல்வர்க்கு நாம் வாக்களித்து அமோக வெற்றியுடன் ஜனாதிபதியாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment