ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதுகாக்கப்படமாட்டாது - தயாசிறி ஜயசேகர எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதுகாக்கப்படமாட்டாது - தயாசிறி ஜயசேகர எம்.பி.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதால் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதுகாக்கப்படமாட்டாது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டி தபாலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்து வருகிறார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாரை வார்ப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாக்கப்படமாட்டாது. எனவே கட்சியை எவருக்கும் தாரைவார்க்க ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.

சுதந்திரக் கட்சி என்பது நடுநிலைக் கொள்கை கொண்ட ஒரு கட்சியாகும். எஸ்.டப்ளியூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க அன்று நடு நிலைக் கொள்கையுடன் இக்கட்சியை ஆரம்பித்தார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கட்சியை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை நாங்கள் சரியாக எடுத்துள்ளோம். நாங்கள் கட்சியை யாருக்கும் விற்கவில்லை.

சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதென்பது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதே ஆகும். அதனை நாங்கள் செய்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட குரோதத்திற்காக சுதந்திர கட்சியைப் பலியிட நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.

இந்நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை நாம் மதித்து நடக்கின்றோம். அவர்களுக்கு எங்களால் முடியுமான அனைத்தையும் செய்வோம். இருந்த போதும் தமிழ் கட்சிகளின் நாட்டைத் துண்டாடும் கோரிக்கைகளை ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அக்குறணை நிருபர்

No comments:

Post a Comment