இந்தியாவில் உள்ளதை போல இலங்கையிலும் மீனவர்களுக்காக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

இந்தியாவில் உள்ளதை போல இலங்கையிலும் மீனவர்களுக்காக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்

இந்தியாவில் மீன் இனங்கள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாது விடுமுறையில் இருப்பார்கள். அவர்களுக்கு அரசினால் நிவாரணமும் வழங்கப்படும். அவ்வாறான சட்டமூலம் இலங்கையிலும் கொண்டுவரப்பட வேண்டும். புதிய அரசு இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலே இணையத்தின் மூத்த பிரதிநிதி சுப்பிரமணியம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளார். மேலும் கடற்றொழில் அமைச்சராக வடக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் பேசும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவாகியுள்ளார். இது எமக்கு அனுகூலங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்வு காண முடியும் என நம்புகின்றோம். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் எமது கடல் வளம் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனால் எமது பகுதிகளில் உள்ள மீன் இனங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன. இந்தியாவில் மீன் இனங்கள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாது விடுமுறையில் இருப்பார்கள்.

அதாவது 45 நாட்களுக்கு இந்திய மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட மாட்டார்கள். அந்த நாட்களின் எண்னிக்கை இப்போது 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்படுவது வழமை.

எமது நாட்டிலும் இந்தியாவில் உள்ளதை போல மீனவர்களுக்காக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நாமும் அந்த சட்டத்தின் படி தொழிலுக்கு செல்லாது இருக்கும் காலத்தில் எமக்கான நிவாரணத்தை அரசு தரவேண்டும். புதிய அரசும் எமது பிரச்சினைகளை நன்கு அறிந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களை பொறுத்த வரையில் சட்டவிரோதமான முறைமைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களினால் பாதிப்படைகின்றோம். அதிலும் பார்க்க தென்னிலங்கை மீனவர்கள் எமது கடல் பகுதியில் மீன்பிடியில் நவீன உபகரணங்களுடன் தொழிலில் ஈடுபடுவதால் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம். வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் மிகவும் அதிகமாக உள்ளது.

மேலும் கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது தென்னிலங்கையில் 29 துறைமுகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் வடக்கில் ஓர் துறைமுகம் கூட முழுமையாக கட்டித் தரப்படவில்லை. வடக்கில் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்தாலும் அது முழுமைப் படுத்தப்படவில்லை. பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு கூட அண்மையிலேயே அடிக்கல் நாடடப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் எவ்வித அபிவிருத்திகளை அங்கு நடந்ததாக தெரியவில்லை என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment