ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, குற்றமிழைத்திருந்தால் ஏன் கடந்த நான்கரை வருடங்களாக அவருக்கெதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
பாணந்துரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அமைச்சர் மங்கள சமரவீர மிலேனியம் சவால் நிதிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றை கொண்டு வந்திருந்தார்.
இதில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதுதான் பிரதான நோக்கமாக இருக்கிறது. இந்தத் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரசார மேடைகளில் சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு செயற்பட முடியாது என ஏமாற்றுக் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் இந்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்தபோது, சஜித் பிரேமதாஸ ஒரு வார்தையையேனும் எதிர்த்துப் பேசவில்லை.
அவர் இன்று கோட்டாபய ராஜபக்ஷவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கிறார். ஆனால், தனியார் தொலைக்காட்சியொன்று அவரை விவாதத்திற்கு அழைத்தபோது அவரால் இதுவரை செல்ல முடியாமல் உள்ளது.
ஊடகவியலாளரின் கேள்விக்கே பதில் சொல்ல முடியாத சஜித், எப்படி மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குவார்? அத்தோடு. இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான காணொலிகளை தயார் செய்வதிலும் அவரது குழுவினர் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இதற்கு எல்லாம் அஞ்சமாட்டோம். கோட்டாபய ராஜபக்ஷ கடந்த காலங்களில் குற்றங்களை செய்திருந்தால், இந்த நான்கரை வருடங்களாக ஏன் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இவர்களிடம் கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment