வட்டுக்கோட்டை, காட்டுப்புலம் பாலத்திற்கு அருகில், 122 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதைத் தடுப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீரிமலை, நகுலேஸ்வரன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடு மேற்கு, நச்சிக்குடாவைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கீரிமலைப் பகுதியிலிருந்து சிறிய ரக லொறி ஒன்றில் 122 கிலோ கிராம் எடையுடைய 60 கேரள கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொறி, கஞ்சா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்களை இன்றையதினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
No comments:
Post a Comment