முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டார் என்ற செய்தியை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் ஒரு வேட்பாளராகவே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளார் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (29) மூதூர் நீர்த்தாங்கி வளாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியாக வருவதாக இருந்தால் எமது வாக்கு தேவைப்படும். ஒவ்வொரு வாக்கும் எமது சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும்.
அரசியல் உரிமையை பெற வேண்டும் என்பதற்காகவே சமூகத்தின் நலனுக்காக செயற்படும் என்னை அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் எனகெதிராக பேசுகின்றனர்.
சிறுபான்மையினராக வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இன்னும் பெற வேண்டி உரிமைகளை பெற்றுக்கொள்ளவில்லை.
மூதூர் பிரதேசம் பல்வேறு இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது. அது மாத்திரம் அல்லாமல் மக்கள் அனுபவித்த உயிர் இழப்பு, உடமை இழப்பு என்பவற்றாலும் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் போட்டியிடும் இச்சந்தர்ப்பத்தில் நமது கனவு எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் எமது கனவை நனவாக்க வேண்டும்.
எனவே இழந்த பல உரிமைகளை பெற ஒட்டகச் சின்னத்திற்கு முதலாவது தெரிவை இடுவதன் மூலம் அது சமூகத்திற்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும் என்றார்.
(மூதூர் நிருபர்)
No comments:
Post a Comment