எவன்கார்ட் விசாரணைகளில் அரசாங்கம் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அரச உயரதிகாரியான ஜனாதிபதி சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலெனவும் இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடொன்றைச் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற விஷேட ஊடக மாநாட்டில் திறன் அபிவிருத்தி தொழிற் பயற்சி பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இத்தகவலை வெளியிட்டார்.
சட்டத்தரணி சுகத கம்லத் குற்றச் செயல்கள் மற்றும் சாட்சியங்களால் பாதிக்கப்பட்டோர் குறித்த தேசிய அதிகார சபையின் தலைவராவார். அவர் இந்த அரச உயர் பதவியை வகித்துவரும் நிலையில் பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டத்தில் மேற்கண்டவாறு பொய்யான தகவலை வெளியிட்டு நாட்டு மக்களை திசை திருப்ப முயற்சித்துள்ளார்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கட்சி அரசியலில் ஈடுபட முடியாது என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அவர் கோட்டாபயவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கும் வகையில் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
கம்லத் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருப்பது பாரதூரமான குற்றமாகும். அவரது இந்தச் செயற்பாடு அரசு அதிகாரிகள், ஊழியர்களின் கௌரவத்தை பாதிக்கும் செயலாகும். அவர் கோட்டாபயவுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் பதவி துறந்து சென்று அதனைச் செய்ய முடியும். பதவியிலிருந்து கொண்டு செயற்படுவது அரசு அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும்.
தேர்தல் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டுள்ள சுகத கம்லத் தொடர்பில் நாம் உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யவிருக்கின்றோம். தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் கம்லத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரவுள்ளோம் எனவும் பிதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment