அமெரிக்கா பிரஜாவுரிமையை ஏப்ரல் மாதமே தான் இரத்து செய்துவிட்டதாகவும், தனக்கான புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையை இந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் பெற்றுக்கொண்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எனது இரட்டை குடியுரிமை தொடர்பாக அனைவரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்னை பாதுகாப்புச் செயலாளராக நியமித்தமையை அடுத்து நான் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தேன். இதனை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்தார்.
தற்போது, அது 15 வருடங்கள் கடந்து எவ்வாறு எனது சான்றிதழ்கள் பொய்யான சான்றிதழ்களாக மாறியது என்றுதான் எனக்குத் தெரியவில்லை.
அப்போது, பொய்யான சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியத் தேவையும் எனக்கு இருக்கவில்லை. எனக்கு சகல தகுதிகளும் இருக்கிறது என்றால், எனது சகோதரர் ஜனாதிபதியாக இருந்தால், நான் ஏன் பொய்யான சான்றிதழ் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்? அப்படி எந்தவொரு தேவையும் கிடையாது.
இவ்வருடம், ஏப்ரல் மாதத்தில் நான் அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்துகொண்டேன். அந்த நாடு, குடியுரிமை இல்லாது செய்யும் நபருக்கு இன்னொரு நாட்டின் குடியுரிமை உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளும். அல்லாவிட்டால், அவர் எந்தவொரு நாட்டின் பிரஜையாகவும் இருக்க மாட்டார் என்றுதான் கருதப்படும்.
அதற்கிணங்க, நான் இந்த நாட்டின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டேன். மேலும், புதிய அடையாள அட்டையையும் நான் பெற்றுக்கொண்டேன். இவை இரண்டும், இந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் எனக்கு வழங்கப்பட்டன என்பதை நான் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
இந்த நிலையில், ஜனநாயக ரீதியாக மக்களின் ஆணைக்கு முகம் கொடுக்க பயந்தே, என்னை வேறு வழியாக தடைசெய்ய இவர்கள் முயற்சித்து வருகிறார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment