வெற்றி முக்கியமா ? சின்னம் முக்கியமா ? பொதுஜன பெரமுன தீர்மானிக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

வெற்றி முக்கியமா ? சின்னம் முக்கியமா ? பொதுஜன பெரமுன தீர்மானிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெற்றி முக்கியமா ? அல்லது சின்னம் முக்கியமா ? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கா தெரிவித்தார். 

கெக்கிராவயில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எவராலும் வீழ்த்த முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாறு பற்றி நீங்கள் அறிவீர்கள். கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்ட பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சியை பொறுப்பேற்றார். 

இன்று எல்லோராலும் பேசப்படுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பற்றியாகும். இதில் இருப்பவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில், அவரின் விளம்பரத்தில் குளிர்காயவுள்ளனர்.

எவ்வாறான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டாலும் இவர்களின் இறுதிப் பயணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியேயாகும். அவர்களால் அக்கட்சியுடன் மிக நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறந்து சென்றவர்கள் எதிர்வரும் வருடத்திற்குள் மீண்டும் கட்சியினுள் இணைந்து கொள்வர்.

நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வது பற்றி பேசப்படுகின்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் எமது நாடாளுமன்ற குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு தீர்மானித்தது.

எமது எதிர்காலம் பற்றி நாம் சிந்திக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்காலம் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனவுடன் இணைவதில் எமக்கு பல சிக்கல்கள் உள்ளன. இதிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. 

இந்த கட்சியை மூழ்கடிப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும். இது மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷை, பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தின் கட்சியும் சின்னமுமாகும். இதனை பாதுகாப்பதே இவர்களின் நோக்கம். வரலாறு படைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதே எமது கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அநுராதபுரம், கல்நேவ நிருபர்கள்

No comments:

Post a Comment