வெளிநாட்டு மதுபானத்தை விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான உச்ச அளவு 7.5 லீற்றரிலிருந்து 80 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபான சில்லறை விற்பனைக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடே இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில், செப்டெம்பர் 27 ஆம் திகதி நிதியமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கலால் அறிவிப்பின் மூலம் இத்திருத்தம் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு மதுபானம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபானங்களும் இவ்வரையறைக்குள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், புதிய விதிமுறைகளின்படி, தனிப்பட்ட நுகர்வு மற்றும் பயன்பாட்டுக்காக வெளிநாட்டு மதுபானங்களை கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்குமான வரையறை 80 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டேபார் 03ஆம் திகதி உலக நல்லொழுக்க மற்றும் மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவதையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் அன்றைய தினம் (ஒக். 03) மூடுமாறு, கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment