ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் விசேட அமைச்சரவைக் குழுவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை தோல்வி - வேலை நிறுத்தம் தொடரும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் விசேட அமைச்சரவைக் குழுவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை தோல்வி - வேலை நிறுத்தம் தொடரும்

ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் விசேட அமைச்சரவைக் குழுவுக்குமிடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுற்றதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரப்போவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது. 

நேற்று பிற்பகல் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை உப குழுவினருக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தமது கோரிக்கை தொடர்பில் முடிவொன்று எட்டப்படாத நிலையில் தாம் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். 

ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று நான்காவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மிகச் சொற்ப ரயில் சேவைகளே நேற்று இடம்பெற்ற நிலையில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகினர். குறிப்பாக காலையில் கடமைக்கு திரும்பும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் மாலை வீடு திரும்பும் ஊழியர்களும் நேற்று பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். 

நேற்றைய தினம் பேச்சுவார்த்தையினையடுத்து ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேவேளை சில அரச, தனியார் நிறுவனங்கள் நேற்றைய தினம் நேரத்துடனேயே செல்வதற்கு அனுமதி வழங்கின. 

இதேவேளை தொடர்ந்தும் தொழிற்சங்க போராட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுவார்களானால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் இச்செயற்பாடு அநீதியானது என்றும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டுவருவதற்காக ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமாயின் சுமார் 20 ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன, ராஜித சேனாரத்ன மற்றும் ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்கவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment