வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் உட்பட இருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே இருவருக்கும் நேற்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் எதிரிகள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
அத்துடன் இருவரும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்தவும் அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
யாழ்.தீவகம் புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மது அருந்துவதற்காகச் சென்ற அவர் மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2011ஆம் ஆண்டு சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இந் நிலையிலேயே தற்போது மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நிருபர்
No comments:
Post a Comment