சாதாரண குடிமக்களை இந்நாட்டுக்கு ராஜாவாக்கும் யுகம் - பொருளாதாரத்திலும் அரசியலிலும் பலம்பொருந்திய வளமான நாடு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

சாதாரண குடிமக்களை இந்நாட்டுக்கு ராஜாவாக்கும் யுகம் - பொருளாதாரத்திலும் அரசியலிலும் பலம்பொருந்திய வளமான நாடு

சாதாரண குடிமக்களை இந்நாட்டுக்கு ராஜாவாக்கும் யுகம் எதிர்வரும் 16 ஆம் திகதி உருவாகுமென புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச கண்டியில் தெரிவித்தார்.

பயங்கரவாதம், அடிப்படைவாதம் இல்லாது அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடியதொரு நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதே தனது நோக்கமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 'இலங்கையின் முன்னோக்கிய பயணத்துக்கு சஜித்தின் சமூக புரட்சி' எனும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று கண்டி 'குயின்ஸ்' ஹோட்டலில் வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும் உரையாற்றுகையில், பொருளாதாரத்திலும் அரசியலிலும் பலம் பொருந்தியதொரு நாட்டை உருவாக்குவதே எனது குறிக்கோள். நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் அதேநேரம் கலாசார உரிமைகளையும் பேணி பாதுகாப்பேன்.

ஒவ்வொரு தனி பிரஜையினதும் உரிமைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பறிபோக நான் எச்சந்தர்ப்பத்திலும் இடமளியேன். சிறந்ததொரு மக்கள் சந்ததியினரை உருவாக்குவதில் எனது அரசாங்கம் கூடுதல் அக்கறை செலுத்தும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது நாட்டின் கலாசாரத்தை நான் மறக்க மாட்டேன். இந்நாட்டில் 51.8 சதவீதமான பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சமவுரிமை பெற்றுக்கொடுப்போம். இளம் சமூகத்தினரை நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவர்களாக உருவாக்குவோம்.

எமது நாட்டில் சிறந்த வளம் உண்டு. இவற்றை பயன்படுத்தி உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்போம். ஊழல், மோசடியில்லாததொரு நாட்டை உருவாக்குவதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவோம். பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர்ப்படையச் செய்வோம்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம். பயங்கரவாத தாக்குதலில் நான் எனது அப்பாவை இழந்தேன். அதனால், பயங்கரவாதத்தினால் உயிர்களையும், உடமைகளையும் இழந்தோரின் வலியை நான் நன்கு உணர்வேன். எதிர்காலத்தில் பயங்கரவாதம் தலைதூக்காததொரு நாட்டை கட்டியெழுப்புவேன்.

அதேபோன்று போதைவஸ்து கடத்தலையும் இந்நாட்டிலிருந்து அடியோடு ஒழிப்பேன். அனைத்து இன மக்களும் அமைதியாக வாழக்கூடியதொரு சூழலை நாட்டில் உருவாக்குவேன். இனம், மதம் அடிப்படையில் எந்தவோர் அடிப்படைவாதமும் தலைதூக்க இடமளிக்க மாட்டேன்.

ஒற்றுமை, நல்லிணக்கம் அடிப்படையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடியதொரு நாட்டை கட்டியெழுப்புவேன். கடந்த அரசாங்கத்தில் கைச்சாத்திடப்பட்ட அனைத்து வெளிநாட்டு உடன்படிக்கைகளும் மீள்திருத்தம் செய்யப்படும்.

நாட்டுக்கு ஏற்புடைய பொதுவான உடன்படிக்கைளை மட்டுமே நான் நடைமுறைப்படுத்துவேன். இதன்படி எவரையும் அடக்கியொடுக்க முடியாத முன்மாதிரியானதொரு நாட்டை கட்டியெழுப்புவேன். இதற்காக அனைவரும் எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

லக்ஷமி பரசுராமன், எம்.ஏ. அமீனுல்லா

No comments:

Post a Comment