தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா சம்பளம் மட்டுமன்றி விசேட திட்டங்களும் அமுல் - இது தொண்டமான் யுகமல்ல, அவரது யுகம் முடிந்துவிட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா சம்பளம் மட்டுமன்றி விசேட திட்டங்களும் அமுல் - இது தொண்டமான் யுகமல்ல, அவரது யுகம் முடிந்துவிட்டது

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா சம்பளம் மட்டுமன்றி அவர்களின் நலன் தொடர்பான விசேட திட்டமொன்றையும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நடைமுறைப்படுத்துவாரென பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மலையக மக்கள் தன்மானத்துடன் சகல உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழக்கூடிய வகையில் விசேட செயற்திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. எனத் தெரிவித்த அவர், அதன் மூலம் மலையக மக்களின் வாழ்வில் பெரும் சுபீட்சம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டைப் பொறுத்தவரை சிறு தேயிலைத் தோட்டங்களே பெரும் வருமானமீட்டுகின்றன. இதன் உரிமையாளர்கள் பொருளாதாரத்தில் சிறந்த நிலையிலும் உள்ளனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது நோக்கம்.

அத்துடன் மலையக தோட்டப்புறங்களில் நிலவும் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்துள்ளார்.

மலையக பகுதியில் எதிர்வரும் தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் பாதிப்பு எவ்வாறு அமையுமென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,

இது தொண்டமான் யுகமல்ல. அவரது யுகம் முடிந்துவிட்டது. இது எமது யுகம். அதனை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு சஜித் பிரேமதாசவுக்கு திட்டமுள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

இல்லை, அவ்வாறில்லை. அது தொடர்பில் கூட்டமைப்பும் எதனையும் சஜித் பிரேமதாசவிடம் சமர்ப்பிக்கவில்லை. அதை அவர் ஏற்றுக் கொள்ளவுமில்லை. எந்த உடன்படிக்கையுமில்லாத நிலையிலேயே சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment