சஜித் பிரேமதாசாவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு! முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைவர் ரவூப் ஹக்கீமின் வியூகமே இது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

சஜித் பிரேமதாசாவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு! முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைவர் ரவூப் ஹக்கீமின் வியூகமே இது

''ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு நிபந்தனையற்ற முறையில் ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எடுத்த முடிவானது முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் தூரநோக்கம் கொண்ட வியூகமாகும். இந்த வியூகத்தை சிலர் விமர்சித்தாலும் காலப்போக்கில் அதன் நன்மை இந்த சமூகத்துக்குக் கிடைக்கும்''.

இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

முஸ்லிம்களுக்கு எதிரான பெரும்பான்மை சக்திகள் சிலவற்றின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் சமூகம் இன்று ஒரு வகையான பாதுகாப்பு சிக்கலை எதிர்நோக்கி இருக்கின்றது. அந்தச் சிக்கலை நீக்கி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பொறுப்பாகும்.

இந்தப் பொறுப்பை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் சரியாகவே செய்து வருகிறார். சஹ்ரானின் குழுவால் இந்த நாட்டுக்குப் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டபோது முஸ்லிம் சமூகம் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியது.

அப்போது எமது தலைவர் எடுத்த ஒரு தீர்மானத்தால் எல்லாம் தலைகீழாக மாறியது. முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல்தான் இந்த ஜானாதிபதித் தேர்தலையும் முஸ்லிம்களின் எதிர்காலப் பாதுகாப்புக் கவசமாக மாற்றுவதற்கு எமது தலைவர் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக அவர் வகுத்த வியூகம்தான் நிபந்தனைகளற்ற ஆதரவை சஜித் பிரேமதாசா அவர்களுக்கு வழங்குவது என்ற தீர்மானம்.

நிபந்தகளை விதித்திருந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் எதிர்த்தரப்பால் பிழையாக திரிபுபடுத்திக் காட்டப்பட்டிருக்கும். அது சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மீது கோபம் கொள்ளக் காரணமாக அமைந்துவிடும். சஜித் பிரேமதாசாவுக்கான சிங்களவர்களின் வாக்குகளை அது குறைக்கவும் செய்யும்.

கடந்த காலத் தேர்தல்களில் ஏனைய இனங்களின் தலைவர்கள் நிபந்தனைகள் விதித்து ஒப்பந்தங்கள் செய்தபோது அவை சிங்கள மக்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்பட்டன என்பதை அறிவோம்.

எமக்குத் தேவை நிபந்தனைகள் விதிப்பதல்ல. எமது வாக்குகளால் சஜித் பிரேமதாஸாவை வெல்ல வைத்து அதனூடாக முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான்.

எங்களின் பாதுகாப்பைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. முதலில் பாதுகாப்பு. அதன் பின்பே ஏனையவை எல்லாம்.

சத்தம் போட்டு - ஆர்ப்பாட்டம் செய்து எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. பொறுமையாக இருந்து சரியான முறையில் வியூகம் வகுப்பதன் மூலம்தான் அந்தப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதை சரியாகச் செய்கிறார் எமது தலைவர் ரவூப் ஹக்கீம்.

சிங்கள மக்களை சீண்டி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை அவர் மிகத் தெளிவாக விளங்கி வைத்து செயற்படுகிறார். அவர் ஓர் இனவாதி அல்ல. அதனால்தான் அவருக்கு சிங்களவர்களுக்கு மத்தியில் நற்பெயர் உண்டு.

காணிப் பிரச்சினைகள், கல்முனை, தோப்பூர் செயலாகப் பிரச்சினை, சாய்ந்தமருது பிரதேச சபைப் பிரச்சினை, புர்கா, நிகாப் பிரச்சினை, முஸ்லிம் விவாக மற்றும் விகார ரத்து சட்டமூலம் சம்பந்தமான பிரச்சினைகள் போன்றவை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியவையாகும். இந்தப் பிரச்சினைகள் முள்ளில் வீழ்ந்த சேலையைக் கழட்டுவதுபோல் கவனமாகத் தீர்க்கப்பட வேண்டும்.

இதைத் தீர்க்கும் விடயத்தில் சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஒற்றுமை சீர்குலையாவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். அது ஒட்டுமொத்தமாக சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்துவிடும்.

ஆகவே, தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தீர்மானத்துக்கு ஏற்ப முஸ்லிம்கள் அனைவரும் செயற்பட வேண்டும். எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைவரின் வியூகத்தின் பின்னால் அணி திரள்வோம். சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செல்வோம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment