ஆறு மாத காலத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் - உலகில் முன்மாதிரியான பாராளுமன்றமாக எமது பாராளுமன்றம் மாறியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

ஆறு மாத காலத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் - உலகில் முன்மாதிரியான பாராளுமன்றமாக எமது பாராளுமன்றம் மாறியுள்ளது

ஆறு மாத காலத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றமொன்றை ஏற்படுத்த முடியும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

8 ஆவது பாராளுமன்றத்தில் புதிய சம்பிரதாயங்களை ஏற்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த முடிந்ததாக தெரிவித்த அவர், நியாயத்தை நிலைநாட்டும் சமுதாயமொன்றிற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யு.எஸ்.எயிட் உதவியுடன் பாராளுமன்றத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையம் ​நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ​மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வில் பாராளுமன்ற அதிகாரிகள், பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி, வானொலி பிரதானிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஊடகங்களினால் நாட்டை அழிக்கவும் முடியும், ஆக்கவும் முடியும். அதேபோன்று பாராளுமன்றத்தை கட்டியெழுப்பவும் முடியும் நாசமாக்கவும் முடியும். 

நான் ஊடகவியலாளர்களின் நலனுக்காக செயற்பட்டிருக்கிறேன். பாராளுமன்றத்தில் முன்மாதிரியான ஊடக நிலையமொன்றை ஆரம்பிக்க முடிந்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்கியிருக்கிறோம்.

8 ஆவது பாராளுமன்றத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிய பல முன்னெடுப்புகளை செய்துள்ளோம். கடந்த காலத்தில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை தொடர்பில் போதிய பிரசாரம் கிடைத்திருக்கவில்லை.

பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலி, ஔிபரப்பு செய்ய எடுத்த நடவடிக்கை வெற்றியளித்தது. மக்கள் இது குறித்து அறிய ஆர்வம் காட்டினார்கள். முதலில் 2 மணித்தியாலங்களே காண்பிக்கப்பட்டது. மக்கள் நேரடியாக அமர்வுகளை பார்ப்பதால் சிலர் இதன் ​போது நடித்தார்கள்.
2003 இல் தகவலறியும் சட்டத்தை கொண்டுவர பாரிய முயற்சி எடுத்தாலும் அது நிறைவேறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானிற்குப் பிறகே எம்மால் இந்த சட்டத்தை கொண்டுவர முடிந்தது.

உலகில் உள்ள சிறந்த தகவல் அறியும் சட்டமொன்றை கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது.

25 வருடங்களின் பின்னர் நிலையியற் கட்டளைகளை மாற்றி கோப் குழு, கணக்குக் குழு என்பவற்றிற்கு ஊடகங்கள் செல்ல அனுமதி வழங்கினோம்.

வரலாற்றில் ஒருபோது மில்லாதவாறு இவற்றினூடாக பாரிய சேவைகள் நிகழ்ந்தன. துறைசார் மேற்பார்வை குழுக்களும் ஊடகங்களுக்கு திறந்து விடப்பட்டன. சில குழுக்கள் சிறப்பாக செயற்பட்டதோடு சில குழுக்களின் அங்கத்தவர்களின் பிரசன்னம் குறைவாக இருந்தது.
கடந்த 4 வருட காலத்தில் பல பிரச்சினைகள் நிகழ்ந்தன. மார்ச்சில் இனவாத பிரச்சினை தலைதூக்கியது. உடனடியாக சர்வகட்சி கூட்டத்தை கூட்டி சகல மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் என்போரை அழைத்து பேசி உடன்பாடு காண முடிந்தது. இன நல்லுறவுக்கான நிலையான தெரிவுக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

தியவன்ன உடன்பாடு ஒன்றை கைச்சாத்திடவும் முடிந்ததோடு இதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு அது ஊடகங்களுக்கு முதன் முறையாக திறந்துவிடப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல பிரபலம் ஏற்பட்டது.
சகல துறை சார் மேற்பார்வை குழுக்களுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்க இருக்கிறோம். நடுநிலையான செய்தி அறிக்கையிடலையே நாம் எதிர்பார்க்கிறோம்.

உலகில் முன்மாதிரியான பாராளுமன்றமாக எமது பாராளுமன்றம் மாறியுள்ளது. சகலரது ஒத்துழைப்புமே இதற்கு காரணமாகும். முதற்தடவையாக பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றங்களிடையே தொடர்பு உருவாக்கப்பட்டது.

8 ஆவது பாராளுமன்றத்தினூடாக புதிய சம்பிரதாயத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த முடிந்துள்ளது.நியாத்தை நிலைநாட்டும் சமுதாயமொன்றிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் அவர் கூறினார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment