ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரை விடுவிக்க வேண்டும் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரை விடுவிக்க வேண்டும் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர்

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் (தலைவர்) உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை செய்யப்பட வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர் தெரிவித்தார். 

இது தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இயல்பிலேயே மென்மையும் அமைதியும் மிகுந்த சுபாவமுடையவர் அவர். எப்போதும் பயங்கரவாதத்திற்கும் வன்முறைக்கும் எதிரான கருத்துடையவராகவே இருந்து வந்தவர். சமூகப்பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர். 

அறிவாளுமையும் சிந்தனைத் தெளிவும் மிக்க அவர், பயங்கரவாத சக்திகளுக்கு துணை போயிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையுமற்றவையாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வன்முறையற்ற, ஜனநாயக வழியிலான சமூக மாற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த அவரை கைது செய்திருப்பதன் பின்புலம் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழவே செய்கின்றன. 

வைத்தியர் ஷாபி, சமூக செயற்பாட்டாளர் டில்ஷான் போன்றோர் கைது செய்யப்பட்டதன் தொடரிலேயே இதையும் நோக்க வேண்டியிருக்கிறது. 

ஆதலால் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துவோம். அதற்காக நம்மால் முடிந்த அழுத்தங்களைப் பிரயோகிப்போம். 

அப்பாவிகள் அநியாயமான முறையில் தண்டிக்கப்படக் கூடாது என்பதை மீள வலியுறுத்துவோமெனவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment