முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை வளங்கள் வகைதொகையின்றி அழிக்கப்படுவதால், சூழல் மாசடைவதாகவும் இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் வட பகுதியில் அதிகளவான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் இங்குள்ள இயற்கை வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வுகள், காடழிப்புக்கள் இடம்பெறுவதுடன், விலையுயர்ந்த காட்டு மரங்களும் வெட்டப்படுகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. எனவே இச்சட்ட விரோத செயற்பாடுகளைத் தடுக்க, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்களும் அமைப்புக்களும் கோரிக்கை விடுக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்வுகள், மணல் அகழ்வுகளுக்கான அனுமதிகள் மாவட்டத்தைச் சேர்ந்த தனி நபர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ வளங்கப்படாது, தென் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வளங்கப்படு கின்றன. ஓட்டுசுட்டான் துணுக்காய் போன்ற பகுதிகளிலும் பெருமளவான கிரவல் மண் அகழப்பட்டு காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.
இதனைவிட வவுனிக்குளம் மற்றும் ஏனைய குளங்களுக்கு நீரைச் சேர்க்கும் ஆறுகளும் துண்டாடப்பட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
(பரந்தன் குறூப் நிருபர்)
No comments:
Post a Comment