மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றதாக எதிர்க் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக சேறுபூசும் நோக்கில் முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டு என இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.
எந்தவித சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும் நோக்கிலேயே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூறினார்.
மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரி.பி.ஏக்கநாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு நாம் அந்த விவாதத்தை இரண்டு மூன்று வாரங்கள் பின்போட முடிவு செய்திருக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) மாலை 5 மணியளவிலேயே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே இன்று (நேற்று) இவ்விடயம் விவாதிக்கப்படுகிறது.
மக்கள் வங்கி திருத்தச் சட்ட மூலம் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டமைக்கும், மத்திய கலாசார நிதிய விடயம் அவசர அவசரமாக விவாதத்துக்கு எடுக்கப்பட்டமைக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக நாம் சந்தேகிக்கின்றோம்.
அரசாங்க நிதி மோசடி செய்யப்பட்டிருந்தால் அது குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, கோப் குழு அல்லது அரச பொதுக் கணக்குக் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கையொன்றின் அடிப்படையிலேயே சபை ஒத்தி வைப்பு பிரேரணையை நடத்த முடியும்.
எனினும், பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சபை ஒத்தி வைப்புப் பிரேரணையை நடத்த முடியாது.
எதிர்க் கட்சியினர் கொண்டுவந்துள்ள சபை ஒத்தி வைப்புப் பிரேரணை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வகையிலானது என்றும், இதனால் நேரம் வீணடிக்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக சேறுபூசுவதற்கே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதில் எந்தவிதமான அடிப்படையும் இல்லை. நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். இந்த மாற்றத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல இரண்டு தரப்பிலும் இருந்து புதிய பரம்பரையினர் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment