பல்லினச் சமூகங்கள் வாழும் இலங்கையில் சகலரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நிரந்தரமான அமைதிச் சூழலை தோற்றுவிப்பதற்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சபாநாயகர் கரு ஜயசூரிய, அனைவரும் பொறுப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டால் ஐக்கிய இலங்கை என்ற இலக்கை எம்மால் எட்ட முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்த நிலையிலும் நாம் சமாதான சக வாழ்வுக்கும் நல்லிணக்கத்துக்கும் வழிதேடிக் கொண்டிருக்கின்றோம். பல்லின, பல்சமய, கலாசார தேசியத்திற்கான செயற்திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். சேர் ராசிக் பரீத் போன்ற எமது பெருந்தலைவர்கள் காட்டிய வழிகளைப் பின்பற்றாமையே எமது பின்னடைவுக்கான காரணமாகும் எனவும் சபாநாயகர் கவலை தெரிவித்தார்.
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டிய அதன் பவள விழா வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றபோது சேர் ராசிக் பரீட்டின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு உரையாற்றினர். சோனக இஸ்லாமிய கலாசார நிலைய தலைவர் ஓமர் காமில் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, இலங்கைச் சோனகர்கள் என்ற முஸ்லிம்கள் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முதலில் வாழ்ந்த பிரதேசமாக காத்தான்குடியே வரலாற்றில் காணப்படுகின்றது.
ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கான சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களோடு கைகோர்த்துச் செயற்பட்டது. தேசிய இலக்கை அடைவதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டும்.
சேர் ராசிக் பரீத் தனது சமூகத்துக்குப் போன்றே நாட்டுக்காகவும், அனைத்து இன மக்களின் நலன்களுக்காகவும் தியாக மனப்பாங்குடன் பங்காற்றினார். மக்கள் பிரதிநிதியாக மட்டுமன்றி மக்கள் தலைவனாக இருந்து மக்களை வழிநடத்தியவராகவே அவரைப்பார்க்க முடிகிறது. தேசப்பற்றுடன் நம்பிக்கைக்குரியவராகவும் அன்னார் காணப்படுகின்றார். இந்த நாடு பெற்றெடுத்த அருந்தலைவர்களில் ஒருவராகவே ராசிக் பரீத் விளங்குகின்றார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment