இலங்கையின் ஏற்றுமதியை 2025ஆம் ஆண்டு 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பாரிய உலகப் பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியினால் உலக பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி 3 வீதமாகக் குறைத்துள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளன.
மோசமான உலக வர்த்தக சூழ்நிலை மற்றும் உள்ளூர் அரசியல் குழப்ப சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் எமது ஏற்றுமதியாளர்கள் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளனர். கடந்த வருடம் ஏற்றுமதியின் ஊடாக 17 பில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது.
இந்த வருடத்தில் முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி வருமானத்தை 9.5 பில்லியன் டொலர்களாகக் காண்பிப்பதுடன், வருட இறுதியில் 19 பில்லியன் டொலர் என்ற இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளோம். இதுவரையில் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதியில் 6.6 வீத வளர்ச்சி காணப்படுகிறது. எமது ஏற்றுமதியாளர்கள் வினைத்தினாக செயற்படுவதுடன், அவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2025 ஆம் ஆண்டாகும்போது ஏற்றுமதி வருமானம் 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை வகுத்துள்ளோம். இலக்கு அடைவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment