எதிர்வரும் நாட்களில் அரசியலில் பல திருப்பங்கள் இடம்பெறலாம் - முரண்பாடான கருத்துகளை கொண்டவர்கள் கட்சியில் இருக்கலாம் ஆனால், அனைவரும் ஐ.தே.க. மீது பற்றுக்கொண்டவர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

எதிர்வரும் நாட்களில் அரசியலில் பல திருப்பங்கள் இடம்பெறலாம் - முரண்பாடான கருத்துகளை கொண்டவர்கள் கட்சியில் இருக்கலாம் ஆனால், அனைவரும் ஐ.தே.க. மீது பற்றுக்கொண்டவர்கள்

எல்பிட்டிய தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் கட்டாயம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி கொள்ளுமென்பது உறுதியாகும். இன, மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என்று ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அத்துடன், ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டுமென்பதை மக்கள் தீர்ப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும். எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்றும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இக்கூட்டத்தில், காலி மாவட்ட அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க உட்பட ஐ.தே.க. ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், கட்சிகளுடனோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ நான் எவ்வித இரகசிய உடன்படிக்கைகளையும் செய்யவில்லை. எதிர்காலத்திலும் எவருடனும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்த நான் தயாரில்லை. ஐ.தே.கவின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரும் இணையலாம். கதவுகள் திறந்தே உள்ளன. 

எனது அரசியல் பயணம் நிர்மலமானது. துளியளவும் கறைப்படியாதது. தனது தந்தை வழியில் ஜனநாயக அரசியல் மீது நம்பிக்கைகொண்டே அரசியல் பயணத்தை தொடர்கிறேன். இந்த ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமான இரண்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

ஒன்று சர்வாதிகார நாடகம். மற்றையது ஜனநாயகம் தொடர்பிலான நாடகம். ஜனநாயகத்தையா அல்லது சர்வாதிகாரத்தை விரும்புகின்றனர் என்பது மக்களது தீர்ப்பாக இருக்க வேண்டும். ஐ.தே.க ஒருபோதும் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டதில்லை. நாடு சுதந்திரமடைந்தது 72 ஆண்டுகளை எட்டவுள்ளது. நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்தே ஐ.தே.கவின் அரசியல் பயணம் அமைந்துள்ளது.

ஐ.தே.கவும் அரசாங்கமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. எமது கடந்த தலைவர்கள் அதனை சமயோசிதமாக வெற்றி கொண்டனர். ஐ.தே.கவுக்குள் முரண்பாடான கருத்துகளை கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால், அனைவரும் ஐ.தே.க. மீது பற்றுக்கொண்டவர்கள். கட்சிக்கு விஷ்வாசமானவர்கள்.

கருத்து முரண்பாடுகளும், வாதப் பிரதிவாதங்களும் ஜனநாயக மரபை கொண்டவையாகும். இறுதியில் தலைமைத்துவத்திற்கும் கட்சியின் செயற்குழுவுக்கும் அனைவரும் கட்டுப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் நான் களமிறங்கியுள்ளேன். நிச்சயமாக ஐ.தே.க ஆட்சிக்குவரும் என்பதுதுடன் நான் ஜனாதிபதியாவேன். 

அனைத்து ஜனநாயகச் சக்திகளும் எம்முடன் இணைய தயாராகவுள்ளன. எதிரணியில் இருந்தும் பலர் வரவுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களில் பல அதிசயமான சம்பவங்கள் இடம்பெறலாம்.

கூட்டங்கள் மற்றும் கோஷங்கள் மூலம் மக்கள் மனதை வெல்ல முடியாது. ஒழுக்கப் பண்புகள் நிறைந்த ஜனநாயகப் பாதையில் நிறைந்த ஜனநாயகப் பாதையிலேயே நாம் பயணிக்கிறோம். எல்பிட்டிய தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் கட்டாயம் நாம் வெற்றிக்கொள்வோம் என்பது உறுதியாகும். இன,மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என்றார்.

(எம்.ஏ.எம் நிலாம்)

No comments:

Post a Comment