ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரத்துக்கு ஏற்கெனவே இசட் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அதற்குரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படும். அதேவேளையில் சிதம்பரத்தின் பாதுகாப்பு கருதி ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறைத்துறை தனியாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்கிறது.
இதன்படி சிதம்பரம் இருக்கும் சிறையில் 24 மணி நேரமும் 7 சிறைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அங்கு ஒரு ஜெயிலரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் 20 காவலர்கள் பிரத்யேகமாக சிதம்பரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
ப. சிதம்பரம் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை சிறையில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி தனது 74 ஆவது பிறந்தநாளன்றும் திகார் சிறையில் இருக்கும் நிலையேற்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் புகார் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2011 பெப்ரவரி முதல் 16 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கனிமொழி 2011 மே முதல் 6 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இரட்டை இலைச் சின்னம் பெற இலஞ்சம் கொடுத்த வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2017 ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் 35 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரம் கைதான அதே ஐஎன்எஸ் மீடியா வழக்கில், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 2018 இல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 11 நாட்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment