வடக்கு, கிழக்கில் ஆயிரம் பெளத்த விகாரைகளைக் கட்டுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 2900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டது. இதன்போது, பெளத்த மக்கள் மிகச் சொற்பமாக வாழக்கூடிய வடக்கு கிழக்கிற்கு இவ்வளவு பெருந்தொகையான நிதி தேவைதானா என ஈ.பி.ஆர்.எல்.எப்பைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கேள்வியெழுப்பவில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் வடக்கு, கிழக்கில் இன்று பல பெளத்த விகாரைகள் தோன்றுவதற்குக் கூட்டமைப்பினர் காரணகர்த்தாக்களாக இருந்திருக்கின்றனர் என்றும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் நல்லூரில் கடந்த 03ஆம் திகதியன்று இந்து மன்றங்களின் ஒன்றியம் நடத்திய பெளத்த திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பெளத்தம் முதன்மையானது என்பதை தாங்கள் ஏற்கப் போவதில்லை எனக் கூறியிருக்கின்றார்.
பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பெளத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்பதை ஏற்றுக்கொண்டு, சம்பந்தன், சுமந்திரன் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்து வந்துள்ளனர்.
பெளத்தம் இலங்கையின் முதன்மை மதம் என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என பாராளுமன்றத்தில் சுமந்திரன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குச் சில ஆண்டுகள் முன்பிருந்து இன்றுவரை இவர்கள் பேசுகின்ற இராஜதந்திரப் போராட்டம் என்பது பெளத்தம் இலங்கையில் முதன்மையான மதம் என்பதை ஏற்றுக்கொண்டு, வட கிழக்கு இணைப்பைத் துண்டித்ததை ஏற்றுக்கொண்டு, சமஷ்டி அரசியல் அமைப்புமுறையைக் கைவிட்டதுதான் இவர்களது இராஜதந்திரமாக இருந்திருக்கிறது.
இவர்களது அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன் இவ்வளவு விடயங்களும் அரங்கேறியிருக்க, திடீர் என்று நித்திரையிலிருந்து கண்விழித்தவர்போல் நாங்கள் பெளத்தம் முதன்மையானது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் கூறுவது தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாகவே மறதிநோயால் பீடிக்கப்பட்டவர்களாக எண்ணுவதாகவே தோன்றுகின்றது.
No comments:
Post a Comment