தேசிய பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம், பகுதி நேர அமைச்சர் ஒருவர் இருக்க முடியாது - அமைச்சர் ரஞ்சித் தெரிவுக்குழு முன் சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2019

தேசிய பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம், பகுதி நேர அமைச்சர் ஒருவர் இருக்க முடியாது - அமைச்சர் ரஞ்சித் தெரிவுக்குழு முன் சாட்சியம்

தேசிய பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். இதற்கு முழுமையான அமைச்சர், செயலாளர் ஒருவர் இருக்க வேண்டும். பகுதி நேர அமைச்சர் ஒருவர் இருக்க முடியாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கயில் தெரிவித்தார். வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கியிருந்ததால் அதன்படி உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தாக்குதல்களை தடுத்திருக்க முடியுமென்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று(06)சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பணியாற்றிய காரணத்தினால் அவர் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் தெரிவுக்குழுவினர் கேட்ட கேள்விகளும் அவர் வழங்கிய பதில்களும் வருமாறு....

பிரதி சபாநாயகர் கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்சராக நீங்கள் சிறிது காலம் பணியாற்றியிருந்தீர்கள். இங்கு சாட்சியமளித்த சிலர் உங்களுக்கு அறிக்கைகள் வழங்கியிருந்ததாகக் கூறியிருந்தனர். இந்தக் குழு தொடர்பில் 2015ஆம் ஆண்டிலிருந்து புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. உரிய நடவடிக்கைககள் எடுக்கப்பட்டதா?

பதில்:- 2018 மார்ச் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரை சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றியிருந்தேன். பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அவ்வப்போது கலந்துரையாடியிருந்தோம். கிழக்கு மாகாணத்தில் இரு பள்ளிவாசல்களுக்கிடையில் பிரச்சினை காணப்பட்டது. அரசாங்க புலனாய்வு சேவையினால் விசேட புலனாய்வு அறிக்கை கிடைப்பதுடன், பொலிஸாரிடமிருந்து நாளாந்தம் அறிக்கை கிடைக்கும்.

மே மாதம் இது தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதக் குழு தொடர்பில் இரண்டு அறிக்கைகள் கிடைத்துள்ளன. ஐ.எஸ் அமைப்பினால் ஆசிய பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரினால் முன்னெடுக்கப்பட்ட அடிப்படைவாதமான பிரசாரங்கள், பேச்சுக்கள் பற்றி மே மாதம் எனக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எமது அதிகாரிகளால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் குறித்தும் தகவல்கள் கிடைத்திருந்தன. பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

சஹ்ரான் என்ற நபர் இரண்டு பள்ளிகளுக்கு எதிராக இடம்பெற்ற மோதல்களுடன் சம்பந்தப்பட்டதாகவும், இதில் தொடர்புபட்ட சிலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்த நபரைக் கைதுசெய்வதற்கு நீதிமன்றதில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவரை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- நாளாந்தம் பொலிஸாரினால் கிடைக்கும் அறிக்கையில் சஹ்ரான் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததா?

பதில்:- இல்லை, நாளாந்தம் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்தே அந்த அறிக்கை அமைந்திருக்கும். விசேடமாக இந்த நபர் பற்றி எந்தத் தகவலும் குறிப்பிடப்பட்டிருக்காதபோதும் இரு பள்ளிவாசல்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களின் தொடர்ச்சியான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சஹ்ரானின் செயற்பாடுகள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை எனக்கு கிடைத்துள்ளது. மக்களை உசுப்பேற்றுவது பற்றியே அதில் அதிகம் குறிப்பிடப்பட்டிருந்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- அல்கைதா அமைப்புடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பற்றிய விசாரணையை நிறுத்துமாறு அமைச்சின் செயலாளரினால் பணிப்புரை விடுக்கப்பட்டதா?

பதில்:- அப்படி விசாரணையை நிறுத்துமாறு பணிப்புரை விடப்பட்டதாக எனக்குத் தெரியாது. இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்கு அல்லது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் பொருத்தமானதாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் அவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருக்கலாம்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டீர்களா?

பதில்:- கலந்துகொண்டேன். மூன்று தடவைகள் கலந்துகொண்டிருந்தேன்.

ரவி கருணாநாயக்க கேள்வி:- பொலிஸாரின் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டதாகக் கருதுகின்றீர்களா?

பதில்:- பொலிஸின் ஒவ்வொரு பிரிவுகளாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரவி கருணாநாயக்க கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?

பதில்:- நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். இதற்கு முழுமையான அமைச்சர், செயலாளர் ஒருவர் இருக்கவேண்டும். பகுதிநேர அமைச்சர் ஒருவர் இருக்க முடியாது. பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் நான் தொடர்ச்சியாக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- சஹ்ரான் தரப்பினரால் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் நவம்பர் மாதத்தின் பின்னர் இடம்பெற்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலப் பகுதியில் இக்குழுவினர் அவ்வாறான நிலைமைக்குச் செல்வார்கள் என அறிக்கை கிடைத்திருந்ததா?

பதில்:- தகவல் கிடைத்ததாலேயே இந்த நபருக்கு எதிராக நாம் பிடியாணை பெற்றிருந்ததுடன், நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- இவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதில் குறைபாடு இருந்துள்ளதல்லவா?

பதில்:- நானும் அவ்வாறு உணர்கின்றேன். அதுதான் நான் முன்னர் கூறியதைப்போன்று சட்டம் ஒழுங்கிற்கு முழுநேர அமைச்சர் ஒருவர் செயற்பட வேண்டும். விசாரணை நடத்திய அதிகாரியை வேறு குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்தமை போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிஷாந்த சில்வா சிறப்பாகச் செயற்பட்ட அதிகாரியாவார்.

ஆஷு மாரசிங்க கேள்வி:- பயங்கரவாத விசாரணைப் பிரிவு சரியாக செயற்பட்டதாகக் கூறியிருந்தீர்கள். எனினும், இங்கு சாட்சியமளித்த சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பயங்கரவாத விசாரணைப் பிரிவு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறியிருந்தார். இதுபற்றி நீங்கள் என்னக் கூறுகின்றீர்கள்?

பதில்:- எனினும், அவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சிலர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், மூவரைக் கைதுசெய்ய குறிப்பாக சஹ்ரான் அவருடைய சகோதரர் உள்ளிட்ட மூவரைக் கைதுசெய்ய பிடியானை பெற்றிருந்தோம்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- ஐ.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் திகன சம்பவத்தின் பின்னரா இடம்பெற்றது?

பதில்:- அதுபற்றி எனக்குத் தெரியாது.

சரத் பொன்சேகா கேள்வி:- சட்டம் ஒழுக்கு அமைச்சுப் பதவியை சுருக்கமாகக் கூறுவதாயின் எவ்வாறு கூறுவீர்கள்?

பதில்:- நளாந்தம் இடம்பெறும் குற்றச்செயல்கள், இதுபோன்ற பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பில் நாம் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வோம். 2015ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது குற்றச்சாட்டுக்கள் குறைந்து வந்தன. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்திருந்ததுடன், அதிகாரிகளை அழைத்து இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்திருந்தோம். அவர்களுக்குக் காணப்படும் குறைபாடுகள் பற்றிக் கலந்துரையாடியதுடன், யாழ்ப்பாணத்துக்குச் சென்று ஆவா குழுவின் பிரச்சினை பற்றி ஆராய்ந்திருந்தோம்.

சரத் பொன்சேகா கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்சு, அமைச்சருக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பில் முன் ஆனுபவம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றீர்களா?

பதில்:- அப்படி அவசியம் என நினைக்கவில்லை. நான் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது சிறப்பாக நிர்வகித்துள்ளேன். சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று உரிய முறையில் அந்த அமைச்சை நிர்வகிப்பதே தேவையாகவுள்ளது. அமைச்சராக நான் நியமிக்கப்படும்போது 30 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருந்தமையால், மக்களுடன் செயற்பட்டவர் என்ற அனுபவம் எனக்கு இருந்தது.

சரத் பொன்சேகா கேள்வி:- 2018ஆம் ஆண்டுமீண்டும் சஹ்ரானை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?

பதில்:- வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதனைத் தடுத்திருக்க முடியும். குறுகிய காலமே நான் பதவியில் இருந்தேன். பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி நான் இங்கு கருத்துத் தெரிவிக்கவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- உங்களுக்குக் கிடைத்த இரண்டு அறிக்கைகளில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றியது எனக் குறிப்பிட்டீர்கள். எப்போது இவை கிடைத்தன?

பதில்:- 2018 மே மாதம்.

எம்.எஸ். பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment