சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குக் கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களை உள்ளூர் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பொன்றை ஏற்படுத்தியிருந்ததாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பணியாற்றிய காரணத்தினால், அவர் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எனது காலப்பகுதியில் உள்ளூரில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான கொள்கையை வகுத்திருந்தேன்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ், மத அடிப்படைவாதம் தொடர்பான பிரிவொன்றை அமைத்திருந்தோம்.
சஹரான் தொடர்பில் விசாரிப்பதற்கு அவர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தேன், முகப்புத்தகத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறும், ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
2016 நவம்பர் 2 ஆம் திகதி சஹரான் பற்றி தகவல் கிடைத்தது. தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நிலைப்பாடு சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக எனக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அரசாங்க புலனாய்வுப் பிரிவினால் அறிக்கையிடப்பட்டிருந்தது.
ஆரம்ப காலத்தில் பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று ஐந்து மாதங்களின் பின்னர் அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. பின்னரான காலப் பகுதியில் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை அமைச்சுப் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் அறிந்துகொண்டேன்.
2016, 2017ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சஹரான் பற்றிக் கதைக்கப்பட்டுள்ளது. எப்படி இதனைத் தடுக்க வேண்டும் என்பது பற்றிய நடவடிக்கைகள் பற்றிக் கூறப்படாதபோதும் இதனைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
எனது பதவிக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த அதிகாரிகளும் சரியான முறையில் நடந்து கொண்டார்கள் என நம்புகின்றேன். எங்கு பிரச்சினை இடம்பெற்றது என்பதை அறிய வேண்டும், ஆரம்பத்திலிருந்து ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதைவிடுத்து தவறிழைக்கப்பட்ட இடத்தையே தேடிப்பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment