பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு

கடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர்களான முஹம்மட் காசீம் முஹம்மட் பைசல் மற்றும் செய்யட் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (23) இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 

சுகாதார, போஷணை மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராக முஹம்மட் காசீம் முஹம்மட் பைசல் பதவியேற்றுள்ள அதேவேளை, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக செய்யட் அலி ஸாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம்,  முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

கடந்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகக் கோரி, அத்துரலிய ரத்ன தேரர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடத்தினார்.

அத்துடன் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அண்மையில் சில முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று இரு உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அமைச்சுப் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment