ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வரைபு பங்காளிக் கட்சிகளால் ஏகமனதாக ஏற்பு - அவசரப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலருக்கு தற்பொழுது காற்றுப்போயுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வரைபு பங்காளிக் கட்சிகளால் ஏகமனதாக ஏற்பு - அவசரப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலருக்கு தற்பொழுது காற்றுப்போயுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வரைபு பங்காளிக் கட்சிகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

கொள்கைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இத் தகவல்களை வெளியிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், கூட்டணியின் தலைவராக ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். 

ஐ.தே.கவினால் பரிந்துரைக்கப்பட்டு தலைமைத்துவ சபையினால் அங்கீகரிக்கப்படும் நபர் கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்படுவார். கூட்டணியின் செயலகம் சுதந்திரமான ஒரு இடமாக இருப்பதுடன் இதனை தலைமைத்துவ சபை தீர்மானிக்கும்.

தொகுதி அமைப்பாளர்களாக ஐ.தே.க அமைப்பாளர்கள் செயற்படுவார்கள். பலவீனமான தொகுதிகளில் கூட்டணியின் சார்பில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிக்கிறது.

நேற்று முன்தினம் பிரதமர், அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐ.தே.க தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் தானும் சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்துக்கான வரைபை ஏகமனதாக அங்கீகரித்தேன்.

அடுத்த கட்டமாக கூட்டணிக்கான கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதற்கான வரைபொன்றை நான் கையளிக்கவிருக்கிறேன். இதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

அக்குழுவில் தன்னுடன், சம்பிக்க ரணவக்க, நிசாம் காரியப்பர், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாசிம் மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று வெளித்தரப்பினரே கொள்கைப் பிரடகனத்தைத் தயாரிக்கிறார்கள். கூட்டணியில் 100 க்கும் அதிகமான சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் 20 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 

சகலரும் இணங்கக் கூடியதாக வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும். கொள்கைத்திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே அதற்குப் பொருத்தமான வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். தனிப்பட்ட நபர்கள் அவசியமல்ல வேலைத்திட்டமே அவசியமானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ முகாமில் எப்பொழுதும் குடும்ப உறுப்பினர்களே வேட்பாளர்கள். எனினும் ஐ.தே.கவில் அவ்வாறான குடும்ப வேட்பாளர் எவரும் இல்லை. வெற்றி கொள்ளக்கூடிய, கொள்கைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார். அவசரப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலருக்கு தற்பொழுது காற்றுப்போயுள்ளது. எனினும் நாம் எவ்வித அவசரமும் இன்றி வேட்பாளரை அறிவிப்போம் என்றார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக நடத்தப்படும் கூட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

கூட்டங்களை நடத்தி ஐ.தே.கவின் மக்கள் ஆதரவை வெளிக்காட்டுவது நல்லவிடயமாக இருந்தாலும், தலைமைத்துவத்தையும் கட்சியையும் விமர்சிப்பது ஆரோக்கியமானதாக அமையாது. ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கு சந்தி கூட்டம் நடத்தி தெரிவுசெய்ய முடியாது. 

நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாது. வேட்பாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவருக்கு ஆதரவு திரட்டும் வகையிலேயே சுவரொட்டிகளும், கட்டவுட்டுக்களும் வைக்கப்பட வேண்டும். இதுவே அரசியல் சம்பிரதாயமாகவுள்ளது என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment