கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவாக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதும் கொழும்பு மாநகர சபையிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லையென பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
மீத்தொட்டுமுல்லை பிரச்சினையைத் தொடர்ந்து கொழும்பு நகரில் அகற்றப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு உரிய இடம் கிடைக்கவில்லை.
இதனால் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்கும் வகையில் எமது அமைச்சு தலையிட்டு கெரவலப்பிட்டியவில் தற்காலிகமாக இடமொன்றை வழங்கியிருந்தது.
ஒரு வருடத்துக்கு இந்த இடத்தில் கழிவுகளைக் கொட்டுவது என்றும், நிரந்தர தீர்வொன்றை அடையாளம் கண்ட பின்னர் அங்கு குப்பைகளை கொட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் கெரவலப்பிட்டியவில் குப்பைகளைக் கொட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், இரண்டு வருடங்களாகிய நிலையில் அங்கு கொட்டக்கூடிய குப்பைகளின் கொள்ளளவு அதிகரித்திருப்பதால் அங்கு சுற்றாடல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குப்பைகளை கொட்டும் பணிகளை இடைநிறுத்துமாறு கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளோம்.
கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக நாம் அறுவாக்காடு பிரதேசத்தில் கழிவகற்றல் தொகுதியின் முதலாவது தொகுதியைப் பூர்த்தி செய்துள்ளோம்.
முதலாவது தொகுதியில் 600 தொன் குப்பைகளைப் பொறுப்பேற்க முடியும் என அறிவித்திருந்தோம். இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கும் அறிவித்திருந்தோம். எனினும் அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை.
தற்பொழுது கொழும்பு நகரில் தோன்றியுள்ள கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வாக, கொழும்பு மாநகர சபையினர் தாம் சேகரிக்கும் குப்பைகளை, அறுவாக்காடு கழிவகற்றல் தொகுதிக்குக் கொண்டுசென்று கையளிப்பது மாத்திரமே எஞ்சியுள்ளது என்றார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment