இலங்கை சின்னமுத்து (Measles) அற்ற நாடு என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2019

இலங்கை சின்னமுத்து (Measles) அற்ற நாடு என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு

இலங்கை சின்னமுத்து (Measles) அற்ற நாடு என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய அலுவலகப் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் பூணம் கேட்ரபால் சிங்க் நேற்றுமுனதினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

இதன்படி தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் சின்னமுத்து நோயை கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வந்துள்ள நான்காவது நாடாக இலங்கை விளங்குகின்றது. 

இலங்கைக்கு முன்னர் பூட்டான், மாலைதீவு மற்றும் திமோர் லெஸ்தொ ஆகிய நாடுகள் இந்நோயை ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளன. இநோயை கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையையிட்டு இலங்கை மக்களையும் அவர் பாராட்டியுள்ளார். 

இலங்கையில் சின்னமுத்து நோய்க்கட்டுப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களையும் தரவுகளையும் சுயாதீன கமிட்டியொன்று பரிசீலனை செய்து, இலங்கை சின்னமுத்து அற்ற நாடு என்ற முடிவை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கின்றது. 

புதுடில்லியில் நடைபெற்ற நோய் எதிர்ப்பு நிர்ப்பீடண மருந்தேற்றல் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுக் கூட்டத்திலே, அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். 

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலக தொற்று நோய்கள் தொடர்பான பிரிவின் பொறுப்பாளர் டொக்டர் நவரட்ணசிங்கம் குறிப்பிடுகையில், இலங்கை மக்களுக்கு வைரஸ் நோய்க்கிருமியால் பரப்பப்படும் சின்னமுத்து நோய் பல தசாப்தங்களாக பெரும் சவாலாக இருந்து வந்தது. 

இவ்வாறான நிலையில் தேசிய மருந்தேற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இரண்டு தடவைகள் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒன்பதாவது மாதத்திலும், அதன் பின்னர் மூன்றாவது வயதிலும் இந்நோய்க்கு தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது. 

இம்மருந்தேற்றல் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், 2016 மே மாதம் முதல் கடந்த மூன்று வருடங்களாக உள்நாட்டு சின்னமுத்து நோய்க்கிருமி தொற்றுக்கு எவரும் உள்ளாகவில்லை. இந்த அடிப்படையில் தான் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றது. 

ஆனால் உலகின் பல நாடுகளிலும் இந்நோய் காணப்படுவதால் அவ்வாறான நாடுகளுக்கு சென்று வருபவர்கள் ஊடாக இந்நோய் இங்கு வரக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இந்த வகையிலே இவ்வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் கொழும்பு, கம்பஹா பிரதேசங்களில் சிலர் சின்னமுத்து நோய்க்கு உள்ளாகினர். 

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் ஆய்வுகளை நடாத்தினர். அந்த ஆய்வுகளின் படி வெளிநாட்டுக்கு சென்று திரும்பியவர்கனளாலே அந்நோய்க்கிருமி இங்கு பரவியமை உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அதுவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

மர்லின் மரிக்கார்

No comments:

Post a Comment