திருகோணமலை, கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தன்று வழிபடச் சென்ற பக்தர்களுக்கு தடை விதித்தமையினால் கன்னியா பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது.
கன்னியா வெந்நீரூற்று விநாயகர் ஆலயம் அமைப்பதில் ஏற்படுகின்ற தடைகளை வீழ்த்தி பௌர்ணமி தினத்தன்று வழிபாடு செய்வதற்காக சென்ற போது பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று கன்னியா சந்தியிலேயே வைத்து அவர்களை தடை செய்துவிட்டார்கள் என்பதோடு, பெருந்திரளான மக்கள் இவ்வழிபாட்டிற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பௌர்ணமி தினமான இன்றைய தினம் (16) கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு தவத்திரு அடிகளார் தலைமையில் சென்ற பக்தர்கள் வழிபடச் சென்றபோது ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக கூறி அவர்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை கையளித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு தவத்திரு அடிகளார் மற்றும் கன்னியா ஆலயத்தின் காணி உரிமையாளரான கோகிலவாணி ரமணி அம்மையாரும் சென்றபோது அவர்களுக்கு இனந்தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தேனீர் சாயங்களை ஊற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வேளையில் ஆதீனத்துக்கு ஏற்பட்ட அவமானம் இந்து சமயத்தை இழிவு படுத்திய செயலெனவும், இச்சம்பவத்தை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ஆதினம் சுவாமியுடன் பேசி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
இந்த மக்களுக்கு உரித்தான இடத்தில் ஆதினத்தை அவமானப்படுத்தி, இந்துக்களின் புனித பூமியில் அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.
அத்துடன் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்திலேயே தான் பிள்ளையார் ஆலயம் அமைக்க வேண்டும் எனவும் அது எங்கள் பூமியாக இருக்க வேண்டும் எனவும் ஊமையாக இருப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தேனீர் சாயங்களை ஊற்றியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் அங்கிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment