இனவாதமெனும் நஞ்சுச் செடியை அழிக்க இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் - தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபைத் தலைவர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

இனவாதமெனும் நஞ்சுச் செடியை அழிக்க இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் - தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபைத் தலைவர் நஸீர் அஹமட்

நாட்டில் விதைக்கப்பட்டுள்ள இனவாதமெனும் நச்சுச் செடிகளை சகல இளைஞர், யுவதிகளும் முன்வந்தே அழித்தொழிக்க வேண்டும் என தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபைத் தலைவர் செய்னுரலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை (14.07.2019) இடம்பெற்ற இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் தகைமையுடன் கூடிய தொழில்வாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு தொழில்துறைசார் பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்ததுடன் ஏற்கனவே பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்திலும் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இனவாதிகள் நாட்டில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளைப் பற்றிக் கணக்கெடுப்பதில்லை. அதேவேளை, ஒரு சில இளைஞர்களைத்தூண்டி விட்டு இனவாதத்தை பெருந்தீயாகப் பரப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.

எனவே, இனவாதமெனும் இந்த நச்சுச்சூழலை இளைஞர், யுவதிகள் முன்வந்தே தகர்த்தெறிய வேண்டும். அத்தகைய மகோன்னத பணியைச் செய்தாலேயொழிய வேறு வகையில் நாடு உருப்பட முடியாது.
இவ்வாண்டு முடிவடைவதற்குள் நைற்றா மூலமாக சுமார் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு வழங்கும் தேசியத்திட்டத்தை இலக்காகக் கொண்டு நாடெங்கும் புதிய புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதன் நோக்கம், தொழில்வாய்ப்பற்று இருக்கும் இளைஞர், யுவதிகளை நாட்டின் பெரும் வளங்கொழிக்கும் செல்வமாகப் பயன்படுத்துவதுடன் அவர்களது கவனம் இனவாத வழிகளில் திசை திருப்பப்பட்டு விடக் கூடாதென்பதேயாகும்.

ஆனால், இனவாதிகள் இளைஞர், யுவதிகளைக் கொண்டே இந்த நாட்டில் இரத்த ஆறு ஓட வேண்டுமென்று சூழ்ச்சி வலை பின்னிக் கொண்டிருக்கின்றார்கள்.பபஅப்படி நிகழுமாக இருந்தால், இந்த நாடு என்றைக்குமே மீண்டெழ முடியாத தேசமாக சிதைந்து விடும்.

ஆகையினால், எதிர்காலத் தலைவர்களான இந்த நாட்டின் ஒவ்வொரு சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்களும் இனவாத தூண்டுதல்களை நிராகரித்து விட்டு தேசிய ஐக்கியத்திற்காகக் குரல் கொடுத்துப் போராட வேண்டும்.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இனவாதிகள் இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்குவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றார்கள், இதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

நாட்டின் அதி உயர் சபையாகிய நாடாளுமன்றத்திலும் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. மதத்தைக் கொண்டு அரசியலுக்குள் புகுத்துவது மகா தவறு. இலங்கையில் அரசியல் என்பது அருவருக்கும் அழுக்கு நிறைந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது.

எனவே, மதத்தைக் கடந்து நாமெல்லோரும் இலங்கையர் என்ற கோதாவில் சிந்தித்து எதிர்காலத்தை நம்பிக்கையும் நலமும் தரக் கூடியதாக மாற்ற வேண்டும். அதற்கு நாட்டின் ஒட்டு மொத்த மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் கடந்த காலங்களில் பல்வேறு பயிற்சிநெறிகளை அங்கீகரிக்கப்பட்ட தொழிற் தகைமையுஞடன் முடித்த பயிலுநர்கள் சுமார் 200 பேருக்கு தகுதிச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment