எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரமுனையிலுள்ள தோட்ட வாடியினை உடைத்து திருடிய மூன்று நபர்கள் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை ஹைறாத் வீதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இப்றாஹிம் றியாஸ் என்பவருக்குச் சொந்தமான காரமுனையிலுள்ள தோட்ட வாடியினை உடைத்து அங்கிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்களிடமிருந்து இரண்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரம், இரண்டு சமையல் எரிவாயு கொள்கலன், வீட்டுத் தளபாடப் பொருட்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த வியாபாரியின் வர்த்தக நிலையத்தில் கூலியாக வேலை செய்து விலகிய நபரும், அவருடன் இணைந்து வாழைச்சேனையில் முச்சக்கர வண்டி திருத்துனர் மற்றும் நாவலடியைச் சேர்ந்த ஒருவருமாக மூவரைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment