நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் வருடாந்தம் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதால் இதைத் தடுக்கும் நோக்கில் தேசிய விபத்து தடுப்புவாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் ஆரம்பமான இது தொடர்பான செயற்திட்டங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்தச் செயற் திட்டங்கள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் லக்மால் கம்லத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் விபத்துக்களில் வருடாந்தம் சுமார் ஒரு மில்லியன் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன் இதில் பலர் ஊனமுறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 15 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டோரின் உயிரிழப்புக்கு திடீர் விபத்துக்களே காரணம். அதிலும் கவனக் குறைவே முக்கிய காரணம், இதற்கென அரசாங்கம் பாரிய நிதியை செலவிட்டுவருகிறது.
திடீர் விபத்துக்கு வீதி விபத்துக்கள், விஷர் நாய் கடி போன்ற விலங்குகளால் ஏற்படும் தாக்கம், நச்சு உடலில் சேர்தல் ஆகியவற்றை குறிப்பிட முடியும். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதற்கிணங்க ஜூலை 1ம் திகதி வீதி விபத்துக்களை தடுக்கும் தினமாகவும் ஜூலை 2ம் திகதி வேலைத் தளங்களில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் தினமாகவும்
ஜூலை 3 ம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் தினமாகவும் ஜூலை 4ம் திகதி ஆரம்ப பாடசாலைகளில் விபத்துக்களை தடுக்கும் தினமாகவும் ஜூலை 5ம் திகதி பாடசாலைகளில் விபத்துக்களைத் தடுக்கும் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment