எந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (16) பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மரண தண்டனையை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சி ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற அழிவுகளின் மூலம் சுமார் 300 அப்பாவி மக்களின் உயிர்களை பழியெடுத்த கொடூர பயங்கரவாத நடவடிக்கைக்கு வகை கூரவேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையை தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகுமென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் குற்றவியல் சட்டத்திற்கேற்ப கொலை, இராஜ துரோகம் போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக குற்றவாளியாக இனங்காணப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படுமென்பதுடன், மரண தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் எடுக்கின்ற முயற்சியின் மூலம் எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்க முடியாதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கி கொள்ளைக்குப் பொறுப்பான அனைத்து வகைகூற வேண்டியவர்களும் தற்போது இனங்காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜூண மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தான் சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியிருப்பதாகவும் இந்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் அவர்களுக்கெதிராக தெளிவான சாட்சிகள் உள்ளதாகவும் சட்டத்திற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு அரச நிர்வாகத்தில் தண்டனைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தண்டனைக்கு பயப்படுவதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து சிறந்ததொரு நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று பிற்பகல் பெலேந்த ரஜமகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பெலேந்த ரஜமகா விகாரதிபதி சங்கைக்குரிய தேவமுல்லே கல்யாண ஸ்ரீவங்ச நாயக்க தேரருக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்று வழங்கிவைக்கப்பட்டதுடன், தேரர் அவர்களினால் ஜனாதிபதிக்கும் நினைவுப்பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.
புதிய கட்டிடங்களை மகாசங்கத்தினரிடம் கையளிப்பதற்கான சன்னஸ் பத்திரங்கள் ஜனாதிபதியினால் பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரரிடம் கையளிக்கப்பட்டது.
சங்கைக்குரிய பிம்புரே உதித்த மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் யு.டி.சி.ஜயலால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment