ஓட்டமாவடி அஹம்ட் இர்ஷாட்
ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கிற்கு அருகாமையில் கடந்த பிரதேச சபை ஆட்சிக்காலத்தில் பல கோடிகள் செலவிடப்பட்டு நவீன சிறுவர் பூங்கா எனும் பெயரில் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டின் நிருவாகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவானது, எவருக்கும் பிரயோசனமற்ற நிலையில் பறவைகளின் தங்குமிடமாகக் காட்சியளிப்பதானது மிகவும் மனவேதனையளிக்கும் விடயமாகவும், மக்களின் பெரும் ஆதங்கத்துக்குள்ளான தீர்க்கப்படாத விடயமாகவும் மாறியுள்ளது.
நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்தே பழைய தவிசாளர் மீதும், அவருடைய நிருவாகத்தின் மீதும் பல குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் எனத்தொடர்ந்தேர்ச்சியாக ஓட்டமாவடி மக்கள் மத்தியில் அலசப்பட்டு வந்த நிலையில், சிறுவர்கள் பூரணமாக உபயோகிக்கும் வகையில் தொடர்ச்சியாக குறித்த பூங்காவானது செயற்படவில்லையென்பது பெரும் குற்றச்சாட்டாகவே சமூகத்தால் பார்க்கப்பட்டது.
அத்துடன், குறித்த பூங்காவிலுள்ள சகல விளையாட்டு இயந்திரங்களும் சிறுவர்களுக்கான பூரண பாதுகாப்பு வசதியுடன் அமைக்கப்படாததும், ஓரிரு விளையாட்டு இயந்திரங்கள் மாத்திரம் மட்டுமே இயங்கக்கூடியதாக இருந்ததும், பெருங்குறைகளாக மக்களால் பரவலாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும்.
அத்தோடு, குறித்த பூங்காவிற்காக கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதியானது செலவு செய்யப்பட்ட, கையாளப்பட்ட விதம் முற்றிலும் பிழையென்றும், பெரும் ஊழல் நிறைந்த செயற்றிட்டமாகவே குறித்த சிறுவர் பூங்காவனது, திட்டமிடலின்றி அமைக்கப்பட்டதாக கடந்த பிரதேச சபையின் ஆட்சியில் தவிசாளராகவிருந்த ஹமீட்டையும், நிருவாகத்தையும் பரவலாக ஊடகங்களில் குற்றஞ்சுமர்த்தி வெளியான செய்திகளுக்கு மத்தியில், கிழமையில் வெள்ளி அல்லது சனி தினங்களில் மட்டுமே சிறுவர்கள் ஓரிரு விளையாட்டு இயந்திரங்களை மாத்திரம் பயன்படுத்தக்கக் கூடியதாக குறித்த சிறுவர் பூங்கா இயங்கி வந்ததமை பிரதேச மக்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.
ஆனால், தற்பொழுது நான்கு வருடங்கள் கடப்பதற்கு முன்னரே கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட குறித்த சிறுவர் பூங்காவானது, முற்றாகச் சேதமடந்துள்ள நிலையில், பறவைகள் சரணாலயமாகவும், தெரு நாய்களின் தங்குமிடமாகவும் மாற்றப்பட்டு எவருக்கும் பிரயோசனமற்ற நிலையில், கேட்பார் பார்ப்பாரற்ற நிலையில் இருப்பதானது, மிகவும் மன வேதனைக்குரிய விடயமென்பதற்கப்பால், அதற்கான முழுமையான தீர்வு உரிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட வேண்டுமென்பதே இங்கு உற்று நோக்கப்பட வேண்டியதும் இச்செய்தியின் சாராம்சமுமாகும்.
இந்த விடயத்தில் தனது நிருவாக எல்லைக்குள் உள்ள மிக முக்கியமான குறித்த சிறுவர் பூங்காவின் அவல நிலையின் முழுப்பொறுப்பினையும் ஓட்டமாவடி பிரதேச சபையே பொறுப்பெடுத்து, அதற்கான உடனடித்தீர்வினை வழங்க வேண்டுமென்பது ஓட்டமாவடி மக்களின் வேண்டுகோளாகும்.
ஆகவே, ஓட்டமாவடி பிரதேசத்து மக்கள் மத்தியில் ஜனரஞ்சமாக எல்லோரும் எதிர்பார்த்த வேட்பாளராகக் களமிறங்கி அமோக வெற்றியுடன், தற்போதைய ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் ஐ.ரீ.அஸ்மியும், அவர் சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள், அதனோடு சேர்த்து முக்கியமாக சிறந்த நிருவாக உத்தியோகத்தர் என மாவட்டத்தில் பெயரெடுத்த சபையின் செயலாளர் சி.சி.ஷிஹாப்தீன் ஆகியோர் குறித்த விடயத்தில் மெளனம் காக்கும் விடயமானது, ஊடகங்களிலும் முகநூல்களிலும் அலசப்படும் செய்திகளாக மாறியுள்ளத அவதானிக்க முடிகின்றது.
எனவே, தற்போது குறித்த பிரதேச சபையில் முக்கிய பொறுப்பிலிருக்கும் மேற்குறிப்பிட்ட மூன்று சாராரும் ஓட்டமாவடி சிறுவர் பூங்காவிற்கு உடனடியாக வழங்கவுள்ள தீர்வு என்னவென்பதே ஓட்டமாவடி சமூகத்தின் பாரிய எதிர்பாப்பாகவும், கேள்வியாகவுள்ளது.
No comments:
Post a Comment