கன்னியாவில் புதிய பௌத்த விகாரை கட்டுமானப்பணியை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மனோ தெரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2019

கன்னியாவில் புதிய பௌத்த விகாரை கட்டுமானப்பணியை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மனோ தெரிப்பு

திருகோணமலை, கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் புதிய பௌத்த விகாரைப் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் மதப் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

இதன்போதே மேற்படி உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார் என்று சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

"32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் சமர்ப்பிப்பேன்.

கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதைத் தடைசெய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்தத் திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்களப் பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடைசெய்ய வேண்டும்.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அங்கு விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்குப் புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்களப் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்தப் பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகின்றார். இந்தநிலையில், வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிப்பது யாரெனத் தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தைக் கூட்டுவார்.

மலைநாட்டில் கந்தப்பளை - கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விகாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்தப் பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் என்னுடன் அமைச்சரான ப.திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், என்னுடைய சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. பா.அரவிந்தகுமார், வே.இராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காரணம் தெரியவரவில்லை" - என்றார்.

charles ariyakumar jaseeharan

No comments:

Post a Comment