அரசாங்கத்தின் இறுதிக் காலக்கட்டத்தில் நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

அரசாங்கத்தின் இறுதிக் காலக்கட்டத்தில் நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன

அரசாங்கத்தின் இறுதிக் காலக்கட்டத்தில் நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாகவும் இதன் ஒருகட்டமாகவே புதிய காணிச் சட்டத்தை திருட்டுத்தனமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றஞ்சாட்டியது.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்த அரசாங்கம் கடைசி கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இக்கட்டத்தில் பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் சர்வதேச நாடுகளுக்கும்த் தேவையானவற்றை நிறைவேற்றி நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைத் திட்டங்களையும் அரசாங்கம் செய்து வருகிறது. 

அதன் ஒரு கட்டமாகவே காணித் தொடர்பிலான புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முற்படுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனாதிபதியின் கடுமையான எதிர்ப்பால் அச்செயற்பாட்டை அரசு, இடைநிறுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் அனுமதியும், அமைச்சரவையின் அனுமதியுமின்றி இச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. திருட்டுத்தனமாக மாத்திரமே இதை அவர்களால் செய்ய முடியும். 

13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் காணி தொடர்பிலான விவகாரங்கள் குறித்து மாகாண சபைகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். 

என்றாலும், தற்போது மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லை. ஆயுள் முடிவடையாதுள்ள ஊவா மாகாண சபை உட்பட ஏனைய மாகாண ஆளுநர்கள் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபைகளின் இணக்கப்பாடின்றி மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

எனவே உள்நாட்டுக்கு ஏற்ற வகையில் மக்களின் எதிர்கால நலனை சிந்தித்து இச் சட்டமூலம் மறுசீரமைக்கப்பட்டு கொண்டுவரப்படும் பட்சத்தில் ஆதரவளிக்க தயார் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment