முஸ்லிம்கள் பலர் பல தடவை எச்சரிக்கை விடுத்திருந்தும் அடிப்படைவாதிகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை - இந்த அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கக்கூடாது.” - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

முஸ்லிம்கள் பலர் பல தடவை எச்சரிக்கை விடுத்திருந்தும் அடிப்படைவாதிகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை - இந்த அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கக்கூடாது.”

நாட்டைப் பாதுகாக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும். இந்த அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கக்கூடாது.”

இவ்வாறு வலியுறுத்தினார் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது “இந்த அரசு பதவி விலகினால் உடனடித் தேர்தலுக்குச் செல்லலாம். அண்மைய தாக்குதல் முதல் அனைத்து பாதகாரச் செயல்களுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் யாருக்கும் வால்பிடிக்கவில்லை.

கடந்த அரசமைப்பு மீறலை நாங்கள் எதிர்த்தோம். இன்று நாங்கள் அரசமைப்பின்படி அரசுக்கு எதிராக ஒரு யோசனையை முன்வைத்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் என்ன முடிவை எடுக்கப் போகின்றது? அவர்கள் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தியவர்கள் கண்முன் தெரியும்போது கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்கவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது எம்.பிக்களை அழைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க கேட்க வேண்டும்.

எனவே, இந்த அரசைக் காப்பாற்ற முயல வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்த அரசுக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை மட்டுமல்ல மக்களிடத்திலும் பெரும்பான்மை ஆதரவு இல்லை. அரசை நடத்தும் உரிமை இந்த அரசுக்குக் கிடையாது.

முஸ்லிம்கள் பலர் பல தடவை எச்சரிக்கை விடுத்திருந்தும் அடிப்படைவாதிகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. எச்சரிக்கை குறித்து வந்த கடிதங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பப்பட்டதே தவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி அலுவலகம் அதற்குப் பதில்கூட அனுப்பியதில்லை. இதற்கு ஒரு அரசு தேவையா? சந்தேகநபர்களை சுதந்திரமாக உலாவ இடமளித்தது அரசு.

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை இருந்திருந்தால் ஒரு சிறிய தகவலையாவது கூறியிருக்கலாம். ஆனால், ஒரு பெரிய சம்பவத்தை எதிர்பார்த்து வேண்டுமென்றே சம்பவங்களுக்கு இடம்கொடுத்துள்ளீர்கள்.

மோட்டார் சைக்கிளில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட குண்டு தொடர்பில் பல தகவல்கள் கிடைத்தும் அதைத் தேடவில்லை. விளையாட்டு அரசு ஒன்று இருந்திருந்தால்கூட இதைவிட நன்றாக செயற்பட்டிருக்கும்.

பாதுகாப்புப் பிரிவு இது தொடர்பில் அறிவுறுத்தல் விடுத்திருந்த போதிலும் மக்களுக்கு ஏன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை? எல்லாம் தெரிந்தும் அதனைச் சொல்லாமல் நாட்டை நிர்வகிக்கத் தெரியாத இந்த அரசை என்ன செய்வது?

இப்படியான குற்றவாளிகள் நாட்டை ஆளலாமா ? இவர்கள் ஆட்சி செய்ய யோக்கியதை கிடையாது. இவர்கள் ஆள்வதற்குத் தகுதியற்றவர்கள். அதனால்தான் அரசுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம். இந்தப் பிரேரணை வெற்றியடைய வேண்டும்” – என்றார்.

No comments:

Post a Comment