மரண தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத் தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதிக்கு சிறிநேசன் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

மரண தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத் தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதிக்கு சிறிநேசன் ஆலோசனை

மரண தண்டனைக்குப் பதிலாக தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் முகமாக சீர்திருத்த தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் கபடத்தனமாக நாடகமாடியவர்கள் மீண்டும் எமக்கு ஆட்சியாளர்களாக இருப்பதற்கு தகுதியுள்ளவர்களா எனச் சிந்தித்தே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை தாம் எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பபு ஏறாவூர் நான்காம் குறிச்சி பத்திரகாளி ஆலயத்தில் மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “மரண தண்டனையை அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக செயற்படுகிறார். ஒரு வகையில் நல்ல விடயமாக இருந்தாலும் தவறுகள் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

போதைவஸ்து கடத்துபவர்கள், மற்றவர்களுக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பக்கம் சரியென பார்க்கின்ற போதிலும் பழிவாங்குவதற்காக இதனைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதனை ஆழமாகச் சிந்திக்கின்ற போது அப்பாவிகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மரண தண்டனை என்பது நாகரீகமான உலகில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்தை கவிழ்த்துவிட வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.

கடந்த காலத்தில் கடத்தல் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், கொலை, கொள்ளை என்பன தாராளமாக இந்த மண்ணில் அரங்கேற்றப்பட்டன.

இவற்றை செய்தவர்களை கடந்த காலத்தில் எமது மக்கள் தோற்கடித்தார்கள். தோற்கடித்தவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தற்போதுள்ள அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு எங்களால் செயற்பட முடியாது. அவர்களது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டது. பயம், பீதியுடன் இருந்தனர். அந்த நிலை மீண்டுமொருமுறை ஏற்படுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டடோம்” என்றார்.

No comments:

Post a Comment