தேர்தலில் போர்க்குற்றவாளிகள் களமிறங்கினால் தோல்வி உறுதி : அவர்களை எவரும் விரும்பவேமாட்டார்கள் - ரணில் அதிரடிக் கருத்து - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2019

தேர்தலில் போர்க்குற்றவாளிகள் களமிறங்கினால் தோல்வி உறுதி : அவர்களை எவரும் விரும்பவேமாட்டார்கள் - ரணில் அதிரடிக் கருத்து

"சர்வதேச ரீதியில் போர்க் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்களும், நாட்டை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள். அவர்களை நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள், சர்வதேச சமூகத்தினரும் விரும்பமாட்டார்கள்."

இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலாகும். 

எனவே, இந்தத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து நின்றே எதிர்கொள்ளும். கடந்த இரு தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பொது வேட்பாளர்களையே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்தது. ஆனால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளர் களமிறங்குவார். 

வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் என்று ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பொய்யானவை - தவறானவை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரின் பெயரை கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும். 

எதிரணியில்தான் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் நிலவுகின்றன. மீண்டும் குடும்ப ஆட்சிக்காக சிலர் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றை மட்டும் நாம் சொல்லிவைக்க விரும்புகின்றோம். 

அதாவது, சர்வதேச ரீதியில் போர்க் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்களும், நாட்டை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள். அவர்களை நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள் சர்வதேச சமூகத்தினரும் விரும்பமாட்டார்கள். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை. கொடூர - சர்வாதிகார - குடும்ப ஆட்சியிலிருந்து இந்த நாட்டை நாம் மீட்டெடுத்தோம். பாரிய அபிவிருத்திப் பணிகளை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்" - என்றார். 

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment