முப்படைகளின் சுற்றிவலைப்பு சோதனைகளின் போது மன அச்சத்தினால் அல்குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகின்றமையும், அதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலைமையினையும் கருதிற்கொண்டு நேற்று (02) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தீவிரவாதக் கும்பல்களை கண்டுபிடிப்பதற்காகவே இராணுவத்தினரும், பொலிஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு சோதனைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மன அச்சத்தினால் அல்குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு ஆறுதல் கூறி வழமை நிலையைக் கொண்டு வருவது எனது பணியாகும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அபாண்டங்களையும், பொய்களையும் சொல்லி தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் சில முற்படுகின்றது.
இது சமூகத்தின் மீதான பிரச்சினை இந்நேரத்தில் முழு நாட்டிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் யார் குற்றவாளியானாலும் தண்டிக்கப்படல் வேண்டும், யார் தீவிரவாதியானாலும் அழிக்கப்படல் வேண்டும்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள எனது சாரதியின் விடுதலை தொடர்பில் தான் பொலிஸாருக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. அவர் தற்போது சந்தேகத்தின் பேரில் தான் கைதாகி உள்ளார்.
எனவே சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும் அது போன்று சாரதி நிரபராதி என உறுதிப்படுத்தப்பட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என நம்புகின்றேன்.
மீட்கப்பட்ட வெடி பொருட்கள் ஆயுதங்கள் தொடர்பில் அவர் ஒரு சந்தேக நபராகவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு தான் ஒரு நிரபராதி என்பதனை நிரூபிக்கும் வகையில் அவர் வாக்கு மூலத்தை வழங்கியதாக அறிகின்றேன்.
இந்த நிலையில் அவர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரைப் பொலிஸார் விடுவிப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன். இன்றேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment