வவுணதீவு சம்பவத்தில் கைதான அஜந்தன் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

வவுணதீவு சம்பவத்தில் கைதான அஜந்தன் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று (11) காலை சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் போராளி அஜந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

இதேவேளை, அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சர்ஹானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதன் அடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அஜந்தனை பிணையில் விடுவித்த பதில் நீதவான், எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.

உதயகுமார் உதயகாந்த் 

No comments:

Post a Comment