குருநாகல் - நாரம்மலை, ஹொரொம்பாவ பிரதேசத்தில் இன்று விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வழங்கிய சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
ஹொரொம்பாவ - புட்டியாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று சோதனைக்குட்படுத்தினர்.
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட நபரின் மச்சான் என கூறப்படும் மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்வான் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற தினம் இரவு குறித்த வீட்டில் அவர் தங்கியிருந்தமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
டெக்ஸ் என்ற மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வீட்டைச் சுற்றி மேற்கொண்ட சோதனையின் போது, வயல்வௌியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 இலட்சம் ரூபாவும் 5000 ரூபா தாள்களாகக் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு பிரிவினர் குறித்த வயல்வௌியை மேலும் சோதனையிட்டனர்.
இதன்போது, பொதியொன்றை பிரதேச மக்கள் கண்டுபிடித்ததுடன், அதில் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரவைகள், 3 டெட்டனேட்டர்கள், வயர்கள் மற்றும் 38 கிராம் வெடிபொருளும் காணப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் கூறினர்.
தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் இரண்டு பயணப்பொதிகள் குறித்த வீட்டில் இருந்து பாதுகாப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, குளியாப்பிட்டியவிலுள்ள வயல்வௌியொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டனர்.
இதன்போது வயல்வௌியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை பொலிஸார் கைப்பற்றியதுடன், இது உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment