மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 2, 2019

மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை வழங்கினார்.

போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.

போதைப் பொருட்களுடன் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டினைக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினை பலமாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், நாட்டில் குற்றங்களை குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், போதைப் பொருள் கட்டளைச் சட்ட திருத்தங்களையும் விரைவில் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

சிறைபிடிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்பான குற்றவாளிகளை பூசா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லவும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் அதனை முன்னெடுத்தல் தொடர்பாவும் கலந்துரையாடப்பட்டது.

போதைப் பொருள் பகுப்பாய்வுடன் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பிரச்சினைகள் பற்றியும் இக்கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் தலதா அதுகோரள, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கொட்டேகொட, பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment