பிரபாகரன், மாவீரர்களின் புகைப்படங்களுடன் கைதான பல்கலை மாணவர் தலைவர், செயலாளரை நேரில் சென்று சந்தித்தனர் கூட்டமைப்பு எம்.பிக்கள்! - News View

About Us

About Us

Breaking

Friday, May 3, 2019

பிரபாகரன், மாவீரர்களின் புகைப்படங்களுடன் கைதான பல்கலை மாணவர் தலைவர், செயலாளரை நேரில் சென்று சந்தித்தனர் கூட்டமைப்பு எம்.பிக்கள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சென்று பாா்வையிட்டுள்ளனா்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவம், பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப் படையினா் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவச் சப்பாத்து ஆகியன மீட்கப்பட்டன. 

இது தொடர்பில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோா் பொலிஸ் உயா் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் கைது செய்யப்பட்ட மாணவா்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மாணவா்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.

எனினும், மாணவர்கள் விடுதலை தொடர்பில் சட்ட மா அதிபருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment